பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி: அசையா சொத்து, வாகனம் இல்லை: வேட்பு மனுவில் தகவல்
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி: அசையா சொத்து, வாகனம் இல்லை: வேட்பு மனுவில் தகவல்
UPDATED : மே 14, 2024 08:53 PM
ADDED : மே 14, 2024 06:34 PM

புதுடில்லி: பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி. ஆனால் அசையா சொத்து மற்றும் வாகனம் இல்லை என தாக்கல் செய்த வேட்பு மனுவில் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார் பிரதமர் மோடி. ஜூன் 1ம் தேதி, 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே (மே 14) கடைசி நாள் என்பதால், இன்று பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய வாரணாசி வந்தார். முன்னதாக அவர் கங்கை ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பின்னர், வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை உறுதிமொழி படிவத்தை படித்து உறுதியளித்துவிட்டு, தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார். வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி. அசையா சொத்து மற்றும் வாகனம் இல்லை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். முந்தைய லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.51 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

