விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணியர்
விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணியர்
ADDED : ஆக 25, 2024 01:49 AM

புனே,
மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே, தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வயல்வெளியில் நேற்று விழுந்து நொறுங்கியது. இதில், பயணித்த பைலட் மற்றும் மூன்று பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, குளோபல் வெக்ட்ரா என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர், நேற்று மதியம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதுக்கு புறப்பட்டது.
புனே அருகே கோந்த்வாலே கிராமத்தின் மேல் பறந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதி தரையில் விழுந்தது.
இதில் ஹெலிகாப்டரின் இறக்கைகள், வால் பகுதி, முகப்பு பகுதி ஆகியவை உருக்குலைந்தன. பயணியர் அமரும் பகுதி பெரிதாக சேதமடையவில்லை.
இதனால், ஹெலிகாப்டரில் பயணித்த நால்வரும் உயிர் தப்பினர். பைலட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை கிராமத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து குறித்து அதில் பயணித்தவர்கள் கூறுகையில், 'மும்பையில் இருந்து நாங்கள் புறப்பட்ட போது வானிலை தெளிவாக இருந்தது.
'புனேயை அடைந்த போது வானிலை மோசமாக மாறியது. பலத்த மழை பெய்ததால், பைலட் ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சித்தார்.
'ஆனால், கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. நேரடியாக தரையில் விழாமல் மரத்தில் விழுந்து, பின், தரையில் கவிழ்ந்ததால் நாங்கள் அனைவரும் உயிர் பிழைத்தோம்' என்றனர்.

