உலகை ஆளும் 'ஓம் சக்தி ஸ்ரீ தேவி கருமாரி அம்மன்' கே.எச்.பி., மெயின் ரோடு, ஆதர்ஷா நகர், ஆர்.டி.,நகர்.
உலகை ஆளும் 'ஓம் சக்தி ஸ்ரீ தேவி கருமாரி அம்மன்' கே.எச்.பி., மெயின் ரோடு, ஆதர்ஷா நகர், ஆர்.டி.,நகர்.
ADDED : ஜூலை 29, 2024 06:30 AM

தமிழகம் ஆரணிப்பாக்கம் மேலப்பந்தலை சேர்ந்த 'சிவ அடிகளார்' தர்மலிங்கம். இவரது மனைவி பாலாம்மாள். இவர்களின் ஆறாவது மகள் சக்தி விஜயம்மா. சிறு வயதில் தெய்வ பக்தி உடைவயராக திகழ்ந்தார். இவருக்கு பிடித்த தெய்வம் கருமாரி அம்மன். உரிய வயதில் நடராஜன் என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதி, வேலை தேடி பெங்களூரு வந்தனர். கணவர், டெய்லராக இருந்தார். இரு ஆண் குழந்தைகள் பிறந்தன.
'தனக்கு அம்மனின் அருள் கிடைத்தது' எப்படி என்பதை, பக்தி பரவசத்துடன் விஜயம்மா நடராஜன் கூறினார்.
ஒரு நாள், கருமாரி அம்மன், என் கனவில் தோன்றி, 'நான் உன்னிடம் வந்து அமர்வேன்' என்று சொல்லி மறைந்தார். அப்போது அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. மற்றொரு நாள் தோன்றி, 'உன் உருவில் நான் அமர போகிறேன்' என்று கூறி மறைந்தார். அதற்கும் அர்த்தம் புரியவில்லை.
அம்மன் அலங்காரம்
'நான் எந்த கோவிலுக்கு சென்றாலும், இப்படி எல்லாம் அம்மன் அலங்காரம் செய்து, கண்குளிர பார்க்க வேண்டும்' என்று ஆசைபடுவேன்.
பிழைக்க வந்த இடத்தில், குடியிருக்க இடம் வேண்டும் என்று அம்மனிடம் வரம் கேட்டேன். 'போ மகளே, நான் இருக்கும் இடத்தையே உனக்கு கொடுக்கிறேன்' என்று கூறிய போது, அம்மன் கையில் இருக்கும் கனி, உருண்டு என் மடியில் விழுந்தது. அந்த கனியை எடுத்து கொண்டு வீட்டுக்கு வந்தேன்.
அன்றிரவு கனவில் தோன்றிய அம்மன், 'நான் கொடுத்த கனியை உன் பூஜை அறையில் வைத்து, நான் வரும் வரை அந்த கனியை பாதுகாக்க வேண்டும். அதற்குள் எத்தனை கஷ்டம், துயரம் வந்தாலும், அதை சமாளித்து என்னை வழிபடு. நான் உன்னிடம் வருவேன்' என்று கூறினார்.
சில நாட்களில், ஒரு இடம் வாங்கினோம். வீடு கட்ட ஆரம்பிக்கலாம் என்று என் கணவர் முடிவு செய்தார். அப்போதும் அம்மாவிடம் சென்று வரம் கேட்டேன். அதற்கு பூவை கொடுத்தார்.
வீடு கட்ட அனுமதி
அன்றிரவு கனவில் தோன்றிய அம்மா, 'நான் இருப்பதற்கு சிறிய இடம் உள்ளது. அதை விட்டு விட்டு, நீ வீட்டை கட்டலாம் என்று உத்தரவிட்டார்.
அவர் கூறியபடி, பாதி இடத்தில் வீடு கட்டினோம். அம்மா கூறியபடி, பல கஷ்டம், சோதனைகள் வந்தன. என் கணவரோ, காலியாக உள்ள பாதி இடத்தை விற்க முடிவு செய்தார்.
'அம்மா கனவில் தோன்றி, நான் இருக்கும் இடத்தை விற்க கூடாது' என்று கூறிவிட்டு மறைந்தாள். ஆனால் என் கணவர் கேட்கவில்லை. தொழிலில் நஷ்டம், குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. இதை பொறுக்க முடியாமல், இடத்தை விற்று ஊருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.
கோபத்தில் என் கணவர், வீட்டில் இருந்த தெய்வங்களின் படங்களை எல்லாம் புற்றின் மேல் வீசினார். அந்த இடத்தை வாங்க சிலர் முன்வந்தனர். அப்போது தெய்வத்திடம் கண்ணீர் விட்டு முறையிட்டேன்.
உனக்கு முன்பே
மறுநாள் கோவிலுக்கு சென்று, அம்மனை தரிசனம் செய்தேன். அப்போது கோவில் அர்ச்சகர், 'நீ அம்மனிடம் சபதம் செய்கிறாய். அவள் உனக்கு முன்பே உன் வீட்டுக்கு தேடி போயுள்ளார்' என்று கோபத்துடன் கூறினார்.
அந்நேரத்தில் என் மகன் என்னை தேடி கோவிலுக்கு வந்து, 'நம் வீட்டிற்குள் நாகபாம்பு ஒன்று விளையாடி கொண்டிருக்கிறது' என்றான்.
அர்ச்சகர், 'இந்த கனியை உன் இல்லத்தில் வை' அம்மன் விளையாடி கொண்டிருக்கிறாள். அவர் மீது யாரும் கை வைக்கக்கூடாது' என்றார்.
நான் வீட்டுக்கு வந்தபோது அவள் மறைந்து விட்டாள். மக்கள் கூட்டத்தை பார்த்தேனே தவிர, அம்மனை பார்க்கவில்லை.
கரு நாகம்
மறுநாள் அதிகாலை 5:25 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது 'வெளியே வா' என்று சத்தம் கேட்டது. நான் போய் பார்த்தபோது, அம்மன் 'கருநாகமாக' எங்களுக்கு காட்சி அளித்தாள்.
பாம்பை அடிக்க வந்தவர்களிடம், அடிக்க வேண்டாம் என்று கூறுவதற்குள், என் கண் முன்னே அதை அடித்து கொன்று விட்டனர். அன்றில் இருந்து, தெய்வ பக்தி என்னுள் குடிகொண்டது. மறுநாள் கோவிலுக்கு சென்று, கண்ணீர் விட்டு அழுதேன். அப்போது அம்மன், 'உன் கஷ்டத்துக்கு நான் தேடி வந்தேன். உன் கண் முன்பே என்னை அழித்து விட்டனர். இதற்கு நீ பரிகாரம் தேடிக்கொள்' என்று கூறி கனியை வீசினார்.
அய்யப்பன் பக்தர்
இந்த சாபத்தில் இருந்து விலக, 48 நாட்கள் அதிகாலையில், பாம்புக்கு பால் ஊற்ற வேண்டும் என்று கூறினர். பால் வாங்க கூட காசில்லை. ஆனாலும், குழந்தைகளுக்காக வைத்திருந்த பாலை, புற்றுக்கு ஊற்றி வந்தேன். என் கணவர், 'இருக்கும் கஷ்டத்தில் மீண்டும் கஷ்டத்தை தேடி போகிறாயே' என்றார். இத்தனைக்கும் அவர், அய்யப்பன் பக்தர்.
ஆனாலும் புற்றுக்கு பால் ஊற்றுவதை நிறுத்தவில்லை. ஒரு நாள் கனமழை பெய்தது. பால் ஊற்ற சென்றபோது, அம்மனின் கண் உருவானது; அம்மன் முகம் தெரிந்தது. அப்போது என் கணவரை அழைத்து காண்பித்தேன். அவரது நண்பர், இதெல்லாம் மூட நம்பிக்கை என்றார்.
அப்போது முனீஸ்வரர், மனித உருவில் வந்து, தெய்வ சக்தி உள்ள இடத்தை காண்பித்து, எனக்கு பொங்கல் வைத்து, சேவலை 'காவு' கொடுத்து, ரத்தத்தை தெளி என்றார்.
அதை செய்த பின், 48ம் நாள் நிறைவில், தேவி கருமாரி, ஆதிபராசக்தி, அங்காள பரமேஸ்வரி என்று மூன்று சக்திகளாக உருவெடுத்து, இந்த எல்லையில் குடிகொண்டு இருப்போம் என்றனர்.
அந்த இடத்தில, எனது கணவர், ஒரு சிறிய கொட்டகை அமைத்தார். தொடர்ந்து வழிபாடு நடந்தது.
இரண்டு லிங்கம்
ஒருநாள் என் உடலில், என் தாய் வந்தாள். புற்றில் இருந்து இரண்டு லிங்கம் தோன்றியது. ஒரு லிங்கம் உடைந்து, சக்தி பீடமாக மாறி, காட்சி கொடுத்தாள். இன்னொரு லிங்கம், சிவனாக அமர்ந்து விட்டது.
கருநாகமாக உருவெடுத்து, அவர் பீடத்தில் சென்று கருமாரியாக மூலஸ்தனத்தில் அமர்ந்தாள். அங்கிருந்து நாகமாக உருவெடுத்து, வாயிற்படியில் அங்காளியாக அமர்வேன் என்று கூறினாள்.
உனக்கு வரும் மக்களால் ஏற்படும் தொந்தரவு, பில்லி சூன்யம், ஏவல் அழிக்க நான் அங்காளியாக இருப்பேன்.
சூலத்தில் நாகம்
இதை பார்த்த என் கணவர், என்னிடம் கோபித்து கொண்டு, தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தபோது, நான் பூஜை செய்து கொண்டிருப்பது அவருக்கு பிடிக்கவில்லை. சூலாயுதத்தை பிடுங்கி எறிய முற்பட்டார். அப்போது எங்கிருந்தோ வந்த நாகம், அந்த சூலத்தில் சுற்றிக் கொண்டு, படமெடுத்து ஆடியது.
இதை பார்த்து என் கணவர் மனம் மாறினார். அந்த இடத்தில் கற்பூரம் ஏற்றி வழி பட்டார். இதன் பின், சூலத்தில் இருந்த நாகதேவதை மறைந்து விட்டாள்.
மறுநாள் அவர் கையாலே, பச்சை தென்னை ஓலை கொண்டு வந்து பந்தல் போட்டார். பின் வயதான பாட்டி ஒருவர், 'இங்கு புற்று இருக்கிறதா' என்று கேட்டார். நான் எதுவும் சொல்லவில்லை. அங்கிருந்த புற்றை பார்த்து, முதல் ஆளாக பால் ஊற்றினார். அதன் பின் பக்தர்கள் வருகை தர துவங்கினர்.
என் கணவரின் கனவில் தோன்றிய தாய், சிலை அமைக்குமாறு கூறினார். அதன்படி எனக்கு தெரியாமலேயே, சிலை உருவாக்க, போளூர் மொடையூரில் 'ஆர்டர்' கொடுத்து விட்டார். சிலை வாங்க, நாங்கள் சென்றோம்.
அம்மன் கண் திறப்பு
சிலை வடிக்கும் சிற்பி, அம்மன் 'கண்' திறக்க போகிறார் என்றவுடன், அம்மனின் கண்கள் திறந்து, இரண்டு முறை அசைத்தாள். இதை அனைவரும் கண் கூடாக பார்த்தோம். அதற்கு சிலை வடித்த சிற்பி, 'இந்த சிலை இந்த உலகை ஆள அவதரித்து உள்ளார். இது போன்று என் வாழ்நாளில் பார்த்ததில்லை' என்று கூறினார்.
கடந்த 2000ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி, அம்மன் கண் திறந்த நாள். ஆண்டுதோறும், இந்நன்னாளில் மிக விமரிசையாக விழா கொண்டாடுகிறோம்.
கோவிலின் உள்ளே கருவறையின் கிழக்கு பகுதியில் விநாயகர், பால முருகன், சப்த கன்னிமார்கள், சிவலிங்கம், பெருமாள் காட்சி அளிக்கின்றனர். தெற்கு திசையில் அங்காளம்மன் குடி கொண்டுள்ளார். கருவறையை சுற்றி வடக்கு பார்த்து நாகதேவதைகள்; மேற்கு திசையில் நவக்கிரஹங்களை வழி படலாம். கோபுரத்தின் வெளியே மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மன்றம் அமைந்து உள்ளது. ஆண்டு தோறும் பக்தர்கள், இங்கே இருமுடிகட்டி கோவிலுக்கு செல்கின்றனர்.
ஜூலை 29ம் தேதி மலர் செய்தி
4ம் பக்கம் செய்தி, விளம்பரம்
Temple Gopuram
கோவில் கோபுரம்
Devi Karumariamman Photo
சிறப்பு அலங்காரத்தில் தேவி கருமாரியம்மன்
இரு படங்கள்: கோபுரம், மூலவர்
ஆடி மாதத்தின் சிறப்புகள்
ஓம் சக்தி ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில் 24ம் பூக்கரக திருவிழா ஆக., 19ம் தேதி தீச்சட்டி ஊர்வலம், அன்னதானம்; 20ம் தேதி பூக்கரக ஊர்வலம், 108 வேல் குத்தி ஊர்வலம், கூழ் வார்த்தல் நடக்கிறது.

