மோடிக்கான ஆதரவு அதிகரிப்பு லண்டன் நாளிதழ் புகழாரம்
மோடிக்கான ஆதரவு அதிகரிப்பு லண்டன் நாளிதழ் புகழாரம்
ADDED : மார் 30, 2024 11:38 PM

புதுடில்லி: ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும், 'தி எகானமிஸ்ட்' நாளிதழில் வெளியாகி உள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போன்ற தலைவர்களுடன் அடிக்கடி ஒப்பிட்டு பேசப்படும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வாயிலாக அவரது வலிமை சாதாரணமானது அல்ல என்பதை எடை போட முடியும். உலகம் முழுதும், பெரும்பாலான நாடுகளில் கல்வி கற்றவர்கள் மத்தியில் ஜனரஞ்சகமான தலைவர்களுக்கு ஆதரவு இருப்பதில்லை. ஆனால் இந்தியாவில் அது தலைகீழாக உள்ளது.
இந்தியாவில், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் இடையே மோடிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை, பல்கலை கல்வி கற்ற, 26 சதவீதம் பேர் டிரம்பை ஆதரிக்கின்றனர். 50 சதவீதம் பேர் எதிர்க்கின்றனர். இதை மோடி தகர்ந்தெறிந்துள்ளார். இந்தியாவில், 2017ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஆரம்ப கல்வியை கடக்காத, 66 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த எண்ணிக்கை படித்தவர்கள் மத்தியில் 80 சதவீதமாக இருந்தது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு பின், பட்டப்படிப்பு முடித்த 42 சதவீதம் பேரும், ஆரம்ப கல்வி வரை படித்த 35 சதவீதத்தினரும் மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, ஜனரஞ்சகமான தலைவரான மோடிக்கான ஆதரவு இந்தியாவில் அதிகரித்து வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

