பா.ஜ.,வினர் இடையே உட்கட்சி பூசல்: மேலிட பொறுப்பாளர் முன் தள்ளுமுள்ளு
பா.ஜ.,வினர் இடையே உட்கட்சி பூசல்: மேலிட பொறுப்பாளர் முன் தள்ளுமுள்ளு
ADDED : ஏப் 14, 2024 09:40 PM

ராய்ச்சூர்: ராய்ச்சூரில், பா.ஜ., மாநில தேர்தல் பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால் முன்னிலையில் முன்னாள் எம்.பி., - தற்போதைய வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மே 7ம் தேதி நடக்கும் லோக்சபா தேர்தலில், ராய்ச்சூரில் போட்டியிட கட்சி மேலிடத்தில் முன்னாள் எம்.பி.,யான பி.வி.நாயக் சீட் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக, ராஜா அமரேஸ்வர் நாயக்கிற்கு, சீட் வழங்கப்பட்டது.
அதிருப்தி
இதனால் அவரும், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருந்தனர். இதை நிவர்த்தி செய்ய, நேற்று முன்தினம் நகருக்கு, மாநில தேர்தல் பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால் வந்தார். முதலில், வேட்பாளர் ராஜா அமரேஸ்வர் நாயக் வீட்டுக்கு சென்றார். அதன்பின், முன்னாள் எம்.பி., நாயக் வீட்டிற்கு சென்று பேசினார்.
இதன்பின், தனியார் ஹோட்டல் ஒன்றில் மேலிட பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால் தலைமையில் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ராஜா அமரேஸ்வர் நாயக்கும், அவரது ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த வேளையில், கூட்டத்துக்கு பி.வி.நாயக்கும், அவரது ஆதரவாளர்களும் வந்தனர். அங்கிருந்த ராஜா அமரேஸ்வரை பார்த்து, 'கோ பேக் ராஜா அமரேஸ்வர் நாயக்' என கோஷம் எழுப்பினர்.
காரசார வாக்குவாதம்
இதனால் இரு தரப்பினரிடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஒருவருக்கொருவர் பிடித்து தள்ளி விட்டனர். இதை பார்த்த மற்ற தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
பின்னர் நடந்த கூட்டத்தில், வேட்பாளர் ராஜா அமரேஸ்வர் நாயக்கிற்கு வேட்பாளருக்கான 'பி பார்மை, பி.வி.நாயக் மூலம் வழங்க வைத்தனர். ஒருவருக்கொருவர் கை குலுக்கி கொண்டனர்.
தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட பா.ஜ., வேட்பாளர் ராஜா அமரேஸ்வர் நாயக், முன்னாள் எம்.பி., நாயக் ஆதரவாளர்கள். இடம்: ராய்ச்சூர்.

