நான் உங்கள் வேலைக்காரன்; 24 மணி நேரமும் மக்களுடன் இருப்பேன்: பிரதமர் மோடி சொல்கிறார்!
நான் உங்கள் வேலைக்காரன்; 24 மணி நேரமும் மக்களுடன் இருப்பேன்: பிரதமர் மோடி சொல்கிறார்!
ADDED : மே 13, 2024 03:13 PM

பாட்னா: நான் உங்கள் வேலைக்காரன். சாதாரண வேலைக்காரன் மட்டுமல்ல. 24 மணி நேரமும் மக்களுடன் இருப்பேன் என தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.
பீஹார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்த வளர்ச்சியை விட, 10 ஆண்டுகளில் நாங்கள் அதிகம் செய்துள்ளோம். ஏழைகளின் வலியை தேசிய ஜனநயாக கூட்டணி அரசு புரிந்து கொள்கிறது. அவர்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். நீங்கள் எனக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்தீர்கள், அந்த பொறுப்பை நான் மிகவும் நேர்மையாக செய்கிறேன்.
வேலைக்காரன்
பா.ஜ., அரசு 10 ஆண்டுகளில் செய்த சாதனையை இன்று உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. நான் உங்கள் வேலைக்காரன். சாதாரண வேலைக்காரன் மட்டுமல்ல. 24 மணி நேரமும் மக்களுடன் இருப்பேன். மக்களின் கனவுகளை நிறைவேற்ற பாடுபடுகிறேன். 2047க்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும்.
உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தும் வகையில் இந்த தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் நாட்டின் நம்பகத்தன்மை மற்றும் அந்தஸ்தை அதிகரித்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
கோழைத்தனமான காங்கிரஸ்
முன்னதாக முசாபர்பூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல். பலவீனமான, கோழைத்தனமான, நிலையற்ற காங்கிரஸ் ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. கனவில் கூட பாகிஸ்தானின் அணுகுண்டை பார்க்கும் அளவுக்கு இவர்கள் (எதிர்க்கட்சிகள்) பயப்படுகிறார்கள். பீஹாரில் சட்டம் ஒழுங்கை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு வந்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான்.
பணவீக்கம்
10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் பணவீக்கம் எப்படி இருந்தது? அப்போது, ஒருவர் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டினால் அதற்கு வருமான வரி கட்டச் சொல்லியது காங்கிரஸ் அரசு. ஆனால், ரூ.50 ஆயிரம் வரை வருமானம் இருந்தால் கூட ஒரு ரூபாய் கூட வரி கட்ட வேண்டியதில்லை என்று சீர்திருத்தம் கொண்டு வந்தது பா.ஜ., அரசு. இவ்வாறு அவர் பேசினார்.

