ADDED : ஏப் 05, 2024 11:09 PM
பெங்களூரு: சாலையில் நின்றிருந்த, பி.எம்.டி.சி., எலக்ட்ரிக் பஸ்சில் திடீரென தீப்பிடித்தது.
சமீப நாட்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன. பி.எம்.டி.சி., மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களும், இதற்கு விதி விலக்கல்ல.
பெங்களூரு புறநகர், பிடதி ரயில் நிலையம் அருகில், டிப்போ வளாகத்தில் நேற்று மதியம் 3:45 மணியளவில், பி.எம்.டி.சி., எலக்ட்ரிக் பஸ் நின்றிருந்தது. அப்போது பேட்டரியில் தீப்பிடித்தது. பஸ்சுக்குள் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்ட டிப்போ ஊழியர்கள் பீதியடைந்தனர். தொழில்நுட்ப ஊழியர்கள், தீயை கட்டுப்படுத்தினர்.
'வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. பஸ்சில் தீப்பிடிக்க இதுவே காரணமாக இருக்கலாம்' என, ஊழியர்கள் கூறுகின்றனர். சம்பவம் நடந்த போது, பஸ்சில் பயணியர் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

