ADDED : ஏப் 13, 2024 05:57 AM

பெங்களூரு: அமைச்சர் செலுவராயசாமி தொடர்ந்த அவதுாறு வழக்கில், ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்ய, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடக விவசாய துறை அமைச்சர் செலுவராயசாமி. மாண்டியாவின் நாகமங்களா தொகுதி எம்.எல்.ஏ., ஆவார். இந்த தொகுதியின் ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., சுரேஷ்கவுடா. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி, ஊடகத்தினருக்கு பேட்டி அளிக்கையில், 'அமைச்சர் செலுவராயசாமி ஊழல் செய்கிறார். மக்கள் பணத்தை கொள்ளையடித்து, டில்லிக்கு அனுப்பி வைக்கிறார்' என்று கூறி இருந்தார்.
சுரேஷ்கவுடா பேட்டி பத்திரிகையில் வெளியானது. இதையடுத்து தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில், சுரேஷ் கவுடா பேசி இருப்பதாகக் கூறி, அவர் மீது பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், அமைச்சர் செலுவராயசாமி அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜே.பிரீத் விசாரித்து வந்தார். நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, சுரேஷ் கவுடா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பவும் நீதிபதி ஜே.பிரீத் உத்தரவிட்டார்.

