ஊழலில் கவனம் செலுத்தும் காங்., கர்நாடக பிரசாரத்தில் மோடி குற்றச்சாட்டு
ஊழலில் கவனம் செலுத்தும் காங்., கர்நாடக பிரசாரத்தில் மோடி குற்றச்சாட்டு
ADDED : ஏப் 21, 2024 06:33 AM

பெங்களூரு: ''கர்நாடகாவில் ஊழல் செய்வது எப்படி என்பது குறித்து காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது. இதனால், பெங்களூரு நகர வளர்ச்சி குன்றியுள்ளது. தெருக்களில் குண்டு வெடிக்கிறது. கல்லுாரியிலேயே மாணவி கொலை செய்யப்படுகிறார்,'' என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே மூன்று முறை கர்நாடகாவுக்கு வந்துள்ளார். நான்காவது முறையாக நேற்று மீண்டும் கர்நாடகா வந்தார். சிக்கபல்லாபூர் மற்றும் பெங்களூரில் நடந்த பிரசார கூட்டங்களில் அவர் பேசியதாவது:
பாடம் புகட்டுங்கள்
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியின் போது, கிசான் சம்மான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மத்திய அரசு 6,000 ரூபாயும்; மாநில அரசு 4,000 ரூபாயும் தந்து கொண்டிருந்தது.
காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், அத்திட்டத்தை நிறுத்தி விட்டனர். இதன் மூலம், காங்கிரஸ் அரசு, விவசாயிகளுக்கு எதிரான அரசு என்பதை அறியலாம். எனவே, அந்த கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
'இண்டியா' கூட்டணிக்கு, தலைவர் யார் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. 2047ல் நாட்டை வளர்ச்சி நாடாக மாற்றுவோம். இதற்காக, பகல், இரவு பாராமல் 24 மணி நேரமும் உழைப்பேன். இதற்கு உங்கள் ஆசிர்வாதம் தேவை. நந்திமலை, தாய் புவனேஸ்வரி, தாய் கோலாரம்மா கோவில்கள், வார இறுதி சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும்.
பெங்களூரு நகரை அழகமான நகரமாக உருவாக்க, கெம்பேகவுடா கனவு கண்டார். வரி செலுத்தும் நகரமாக இருந்த பெங்களூரை, காங்கிரஸ் அரசு, டேங்கர் நகரமாக மாற்றி உள்ளது.
நகரம் தற்போது, டேங்கர் மாபியா கைகளில் சிக்கி உள்ளது. 2014க்கு முன், 17 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில் இயங்கி வந்தது; தற்போது 70 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்படுகிறது.
இங்குள்ள எச்.ஏ.எல்., தொழிற்சாலை குறித்து காங்கிரசார் பொய் தகவல் பரப்பினர். ஆனால், தற்போது வர்த்தகம் உயர்ந்துள்ளது. நாட்டிலேயே மிக பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குகிறது.
கர்நாடகாவில் ஊழல் செய்வது எப்படி என்பது குறித்து காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது. இதனால், பெங்களூரு நகர வளர்ச்சி குன்றியுள்ளது.
தெருக்களில் குண்டு வெடிக்கிறது. கல்லுாரியிலேயே மாணவி கொலை செய்யப்படுகிறார். சமூக விரோதிகளை காங்., ஊக்குவிக்கிறது. இதனால் மிக பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
புல்லட் ரயில்
கண்டிப்பாக கர்நாடகாவுக்கு புல்லட் ரயில் திட்டம் கிடைக்கும். இளைஞர்களின் வேலை வாய்ப்பு பெருகும். உலக நாடுகள் இந்தியாவுடன் நட்பு ஏற்படுத்தி கொள்ள விரும்புகிறது. ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். ஏழைகளின் கஷ்டம் எனக்கு புரியும். பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்கள் வீடு வீடாக சென்று, மோடி உங்களுக்கு நன்றி தெரிவித்தார் என்று சொல்லி ஓட்டு கேளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிக்கபல்லாப்பூரில், ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவுக்கு எதுவும் செய்யவில்லை என்று காங்கிரஸ் அரசின் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், சொம்பு விளம்பரத்தை நாளிதழ்களுக்கு கொடுத்துள்ளனர்.
ஆனால், 2004 - 2014 வரை மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான், நாட்டின் வளத்தை காங்கிரஸ் கொள்ளை அடித்தது. காலியான வெறும் சொம்பு மோடியிடம் கொடுக்கப்பட்டது.
ஆனால், 2014 - 2024 வரை 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்த மோடி, காலி சொம்பை, அட்சய பாத்திரமாக மாற்றி உள்ளார். நாட்டில் பல வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. தொழில் பெருகி, வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடி, அரண்மனை மைதானத்தில், பிரசார பொதுக் கூட்டத்தை முடித்து, ஹெலிபேடுக்கு காரில் செல்ல தயாராக இருந்தார். இதற்கிடையில், கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபாட், மேக்ரி சதுக்கம் பகுதியில், சில தொண்டர்களுடன் கைகளில் சொம்பு காண்பித்து மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
இதை சற்றும் எதிர்பாராத போலீசார், உடனே அவர்களிடம் இருந்த சொம்புகளை பறித்து, கைது செய்து, சதாசிவநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால், சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

