ADDED : மே 02, 2024 06:34 AM

பெங்களூரு: “கர்நாடகாவில் வறட்சி தீவிரமாக உள்ளது. மாநில காங்கிரஸ் அரசு, வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை. கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவில்லை,” என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா குற்றம் சாட்டினார்.
'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று அவர் கூறியிருப்பதாவது:
கர்நாடகாவில் வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வறட்சியால் விவசாயிகளும், மக்களும் அவதிப்படுகின்றனர். இதுவரை மாநில அரசு, ஒரே ஒரு கோசாலை கூட திறக்கவில்லை. தீவன பொருட்கள் வழங்கவில்லை. விவசாயிகளுக்கு எதிரான அரசுக்கு, மக்களே பாடம் புகட்டுவர்.
ஏழு மாதங்களாக விவசாயிகளுக்கு, பால் ஊக்கத்தொகை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றுகிறது. காங்கிரஸ் அரசுக்கு விவசாயிகளின் சாபம் பலிக்காமல் போகாது. குடிநீர் டேங்கர் மாபியாவுக்கு கடிவாளம் போடவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கவில்லை.
தலித்துகள், பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட பணம், வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் ஊக்கத்தொகை, எந்த நோக்கத்துக்கு பயன்படுகிறது என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

