டிராக்டர் மீது பஸ் மோதி விபத்து மஹா.,வில் 5 பேர் உயிரிழப்பு
டிராக்டர் மீது பஸ் மோதி விபத்து மஹா.,வில் 5 பேர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 17, 2024 01:17 AM
மும்பை, மும்பை அருகே விரைவுச்சாலையில் டிராக்டர் மீது பக்தர்களை ஏற்றி சென்ற பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; 42 பேர் காயமடைந்தனர்.
மஹாராஷ்டிராவின் பந்தர்பூரில் உள்ள விட்டல் சாமி கோவிலில் இன்று ஆஷாதி ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவர்.
இதையொட்டி நேற்று முன்தினம் இரவில் தானே மாவட்டம் டோம்பிவிலியில் இருந்து 54 பக்தர்களுடன் பஸ் ஒன்று பந்தர்பூருக்கு புறப்பட்டுச் சென்றது.
நவிமும்பை அருகே பன்வெல் பகுதியில் மும்பை - புனே விரைவுச்சாலையில் சென்றபோது திடீரென முன்னால் சென்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.
பின்னர் சாலை தடுப்பில் மோதிய பஸ், 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் சென்ற மூன்று பக்தர்கள், டிராக்டரில் சென்ற இருவர் என மொத்தம் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 42 பயணியர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து பற்றி அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் விரைந்து செயல்பட்டு காயம் அடைந்தவர்களை மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இவர்களில் ஏழு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

