என் பணிகளே பாதுகாப்பு அரணாக இருக்கும் பா.ஜ., வேட்பாளர் கோவிந்த் கார்ஜோள் நம்பிக்கை
என் பணிகளே பாதுகாப்பு அரணாக இருக்கும் பா.ஜ., வேட்பாளர் கோவிந்த் கார்ஜோள் நம்பிக்கை
ADDED : ஏப் 25, 2024 05:40 AM

சித்ரதுர்கா : ''நான் அமைச்சராக இருந்தபோது செய்துள்ள பணிகளே, எனக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்,'' என, சித்ரதுர்கா பா.ஜ., வேட்பாளர் கோவிந்த் கார்ஜோள் தெரிவித்தார்.
சித்ரதுர்காவில் நேற்று அவர் கூறியதாவது:
நான், சமூக நலத்துறை அமைச்சராக இருந்தபோது, சித்ரதுர்காவின் வளர்ச்சிக்காக 600 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தினேன். இந்த திட்டங்கள் எனக்கு பாதுகாப்பு கவசமாக நிற்கும்.
நாட்டை திறமையாக வழிநடத்தும் திறமையான வேட்பாளர் பிரதமர் நரேந்திர மோடி என, மக்கள் முடிவு செய்துள்ளனர். என்னை வெளியாள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த, காங்கிரஸ் முயற்சிக்கிறது.
இந்திரா, ரேபரேலியில் தோற்றபோது, சிக்கமகளூரு வந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்றார்; பாதாமியில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெளியாள் இல்லையா?
நான் வட மாவட்டத்தை சேர்ந்தவன். மத்திய பகுதியில் போட்டியிடுகிறேன். எனக்கு இங்கு உறவினர்கள் உள்ளனர். ஆனால் சந்திரப்பாவுக்கு, தொகுதியில் சொந்தம், பந்தம் இல்லை.
துமகூரில் இருந்து, தாவணகெரே வரை, அலமாட்டியில் இருந்து, சித்ரதுர்காவுக்கு ரயில் இணைப்பு ஏற்படுத்துவேன். இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வேண்டும். மக்கள் புலம் பெயர்வதை தவிர்க்க, தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்ரா மேலணை திட்டத்துக்கு, எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு அதிகமான நிதி வழங்கியது. நான் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தபோது, 4,800 கோடி ரூபாய் கொண்டு வந்தேன். ஆனால் இன்றைய அரசு, திட்டத்தில் ஆர்வம் காண்பிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

