கெஜ்ரிவால் கைது: டில்லி உட்பட பல மாநிலங்களில் போராட்டம்
கெஜ்ரிவால் கைது: டில்லி உட்பட பல மாநிலங்களில் போராட்டம்
ADDED : மார் 22, 2024 11:24 PM

புதுடில்லி,:டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தலைநகர் டில்லியில் நேற்று, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். அமைச்சர்கள் அதிஷி சிங் மற்றும் சவுரவ் பரத்வாஜ் உட்பட அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
டில்லி அரசின் 2021- 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரிக்க டில்லி கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார். விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உட்பட 12 பேரை கைது செய்தது.
மேலும், இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அமலாக்கத் துறையும் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை கைது செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இதுவரை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை, 9 முறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஆனால், அத்தனை சம்மன்களையும் கெஜ்ரிவால் நிராகரித்தார். இது சட்டவிரோதமானது என பதில் அளித்தார். இதுதொடர்பாக, அமலாக்கத் துறை டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தன்னை கைது செய்யக்கூடாது எனக் கோரிக்கை விடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நேற்று முன் தினம் விசாரித்த உயர் நீதிமன்றம், கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
அதேநேரத்தில், சம்மன்கள் அனுப்புதவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஏப்.,22ல் விசாரிப்பதாக கூறியுள்ள நீதிபதிகள், இதுகுறித்து, இரண்டு வாரங்களுக்குள் பதில்மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குள் நேற்று முன் தினம் மாலை அதிரடியாக புகுந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் வீடு முழுதும் அதிரடி சோதனை நடத்தினர்.
கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தினர். அதன் முடிவில், நேற்று முன் தினம் இரவு, அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் அறிவித்தனர். அவரை, அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலைநகர் டில்லியில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., அலுவலகம் அருகே ஐ.டி.ஓ., சந்திப்பில், அமைச்சர்கள் அதிஷி சிங் மற்றும் சவுரவ் பரத்வாஜ் ஆகியோர் தலைமயில் ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று காலை திரண்டனர்.
மத்திய அரசு மற்றும் பா.ஜ.,வைக் கண்டித்து கோஷமிட்டனர்.
ஏராளமானோர் திரண்டதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கலைந்து செல்லும்படி போலீஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், அமைச்சர்கள் தலைமையில் கூடியிருந்த ஆம் ஆத்மி கட்சியினர் சாலையில் அமர்ந்து போரட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து, அமைச்சர்கள அதிஷி சிங், சவுரவ் பரத்வாஜ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து பேசிய அதிஷி சிங், “ஐ.டி.ஓ.,வில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய என்னை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். டில்லி முதல்வரை பொய் வழக்குகளில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்த ஜனநாயகப் படுகொலைக்கு தேர்தலில் மக்கள் பதில் அளிப்பர்,” என்றார்.

