வீட்டில் கிடந்த 5 எலும்பு கூடு; தற்கொலை செய்தது அம்பலம்
வீட்டில் கிடந்த 5 எலும்பு கூடு; தற்கொலை செய்தது அம்பலம்
ADDED : மே 17, 2024 05:56 AM
சித்ரதுர்கா : பாழடைந்த வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட, ஐந்து எலும்பு கூடுகள் வழக்கு தொடர்பான, தடயவியல் ஆய்வறிக்கை வந்துள்ளது.
சித்ரதுர்கா நகரின் பெங்களூரு சாலையில் பாழடைந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, ஐந்து பேரின் எலும்பு கூடுகள் 2023ன் டிசம்பர் 29ல், கண்டுபிடிக்கப்பட்டன. இது தேசிய அளவில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீட்டில் ஜெகன்னாத ரெட்டி, 85, இவரது மனைவி பிரேமா, 80, இவர்களின் மகள் திரிவேணி, 62, மகன்கள் கிருஷ்ணா, 60, நரேந்திரா, 57, ஆகியோர் வசித்து வந்தனர். சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து, போலீசார் விசாரித்தனர். ஜெகன்னாத் எழுதி வைத்திருந்த கடிதமும் கிடைத்தது.
இவரது மகன் நரேந்திரா, 2013ல் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார். அதே ஆண்டு அவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து, பிடதி அருகில் வாகனத்தை வழிமறித்து கொள்ளை அடித்தார்.
இந்த வழக்கில் கைதான அவர், சில நாட்கள் சிறையில் இருந்தார். நரேந்திராவின் செயலால், குடும்ப மானம் பறிபோனதாக வருந்தி, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் விவரிக்கப்பட்டிருந்தது.
இவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், சித்ரதுர்கா போலீசார், எலும்பு கூடுகளின் மாதிரியை, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினர். தடயவியல் ஆய்வறிக்கை நேற்று, விசாரணை அதிகாரிகளிடம் வந்தடைந்தது. அறிக்கையில், ஐந்து பேரும், 2019லேயே, துாக்க மாத்திரை தின்று, தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
***

