மைசூரு - சென்னை இடையே 2வது 'வந்தே பாரத்' ரயில் துவக்கம்
மைசூரு - சென்னை இடையே 2வது 'வந்தே பாரத்' ரயில் துவக்கம்
ADDED : ஏப் 05, 2024 11:20 PM

மைசூரு: மைசூரு - சென்னை இடையே, 2வது வந்தே பாரத் விரைவு ரயில் சேவை நேற்று முதல் துவங்கியது.
சென்னையில் இருந்து பெங்களூரு மார்க்கமாக, மைசூருக்கு வந்தே பாரத் விரைவு ரயில் ஏற்கனவே இயக்கப்படுகிறது. வியாழன் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் அதிகாலை 5:50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுகிறது. நண்பகல் 12:20 மணிக்கு மைசூரு வந்தடைகிறது.
மறு மார்க்கத்தில் மதியம் 1:05 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு, இரவு 7:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது. இந்த ரயில் பயணியரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
காலை வேளையில் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கினால், வசதியாக இருக்கும் என்று பல பயணியர் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில், கடந்த மாதம் மைசூரு - சென்னை இடையே 2வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
மைசூரு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்ததால், பெங்களூரின் எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்பட்டு வந்தது.
பணிகள் நிறைவு பெற்றதால், மைசூரில் இருந்து, நேற்று முதல் சென்னை சென்ட்ரலுக்கு காலை வந்தே பாரத் ரயில் சேவை துவங்கியது.
மைசூரில் இருந்து, நேற்று காலை 6:00 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில், மாண்டியா வழியாக கே.எஸ்.ஆர்., பெங்களூருக்கு 7.45 மணிக்கு வந்தடைந்தது. 7.50 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், காட்பாடி மார்க்கமாக, சென்னை சென்ட்ரலுக்கு நண்பகல் 12:25 மணிக்கு சென்றடைந்தது.
மறு மார்க்கத்தில், மாலை 5:00 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு இரவு 9.25 மணிக்கு பெங்களூரு வந்தடைந்தது. இங்கிருந்து மைசூருக்கு புறப்பட்டது.

