கல்லுாரி மாணவி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
கல்லுாரி மாணவி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 21, 2024 05:28 AM
கலபுரகி: ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி, கல்லுாரி மாணவி பலாத்காரம் செய்த மஹாராஷ்டிரா வாலிபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கலபுரகி நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், அமராவதி அரலா கிராமத்தை சேர்ந்தவர் விக்கி, 25. சமூக வலைத்தளமான 'இன்ஸ்டாகிராம்' பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் கர்நாடகாவின் கலபுரகி ஆலந்த்தை சேர்ந்த 18 வயது கல்லுாரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மொபைல் எண்ணை பரிமாறி கொண்டு, வீடியோ காலில் பேசினார்.
விக்கி கேட்டதால், கல்லுாரி மாணவி வீடியோ காலில் நிர்வாணமாக பேசியுள்ளார். இதை விக்கி வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை கல்லுாரி மாணவிக்கு அனுப்பி, 'என்னுடன் உல்லாசமாக இருக்க வரவேண்டும். இல்லாவிட்டால் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்' என்று மிரட்டினார்.
கடந்த ஆண்டு மார்ச் 12ம் தேதி, கல்லுாரி மாணவியை, தன்னுடைய அரலா கிராமத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார். இதுகுறித்து மாணவி, ஆலந்த் போலீசில் புகார் செய்தார்.
விக்கி கைது செய்யப்பட்டார். அவர் மீது, கலபுரகி விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி யமனப்ப பம்மநாகி நேற்று தீர்ப்பு கூறினார். விக்கிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 28,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

