
'டெல் மான்டே புட்ஸ்' திவால் மனு
டெல் மான்டே புட்ஸ், அமெரிக்காவின் 139 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நிறுவனம். இது, உலோக டப்பாவில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு பெயர் பெற்றது. அமெரிக்க நுகர்வோருக்காக இந்நிறுவனம் தன் தயாரிப்புகளை அதிகரித்து வந்தது.
இந்நிலையில், உணவு பணவீக்கம் மற்றும் டிரம்ப் அரசு விதித்த உலோக வரி உள்ளிட்ட செலவுகளால் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, டெல் மான்டே தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனம் திவால் மனு தாக்கல் செய்துள்ளது.
சிமென்ட் வணிகத்தை ஒருங்கிணைக்கும் அதானி
அதானி குழுமம், 'ஒரு வணிகம், ஒரு நிறுவனம்' என்ற கொள்கையின் கீழ், அதன் அனைத்து சிமென்ட் வணிகத்தையும் ஒரே நிறுவனத்தின் கீழ் ஒருங்கிணைக்கும் செயல்முறையை துவங்கியுள்ளது.
இதன் வாயிலாக, ஏ.சி.சி., மற்றும் அம்புஜா சிமென்ட் இரண்டும் முக்கிய பிராண்டுகளாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், அதானி சிமென்ட் நிறுவனத்தை தாய் பிராண்டாக விளம்பரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது, ஆதித்ய பிர்லா குழுமத்தின் முன்னணி நிறுவனமான அல்ட்ராடெக் சிமென்ட் உடன் போட்டியிட உதவும் என, அதானி குழுமம் கருதுகிறது.