/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: ரயில் பயணத்தில் 45 காசு காப்பீடு பயன் தருமா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: ரயில் பயணத்தில் 45 காசு காப்பீடு பயன் தருமா?
ஆயிரம் சந்தேகங்கள்: ரயில் பயணத்தில் 45 காசு காப்பீடு பயன் தருமா?
ஆயிரம் சந்தேகங்கள்: ரயில் பயணத்தில் 45 காசு காப்பீடு பயன் தருமா?
UPDATED : ஆக 11, 2025 11:05 AM
ADDED : ஆக 10, 2025 11:35 PM

என் கிரெடிட் கார்டு கணக்கை குளோஸ் செய்கிறேன். மீதமுள் ள கடன் தொகையை ஒரே பேமெண்டில் கொடுத்து விடுகிறேன், எவ்வளவு தொகை செலுத்த வேண்டுமென கணக்கிட்டு சொல்லுங்கள் என்று வங்கிக்கு இ - மெயில் அனுப் பினேன்; இன்று வரை பதில் இல்லை. வருகிற ஸ்டேட்மென்டில் 3,000 ரூபாய் பராமரிப்பு கட்டணம் கேட்டு விடுவர் என அஞ்சுகிறேன். போனில் பேசினால் அவர்கள் பேசும் ஹிந்தி, இங்கிலீஷ் புரியவில்லை. இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர தீர்ப்பாயம் ஏதும் உள்ளதா?
கா.சிவகுமார், சென்னை.
கிரெடிட் கார்டு கடனை மொத்தமாக அடைத்துவிட்டு வெளியே வர முடிவு எடுத்தீர்களே, அதற்கே உங்களை பாராட்ட வேண்டும். தீர்ப்பாயத்துக்கு உடனடியாக போக முடியாது; படிப்படியாகத் தான் போக வேண்டும்.
நீங்கள் எழுதிய இ - மெயிலுக்கு 30 நாட்களுக்குள் பதில் வரவில்லை என்றால், கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியின் நோடல் அலுவலருக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
அதில், 'இறுதி செட்டில்மென்ட் தொகை' எவ்வளவு மற்றும் அந்த தொகையை ஒரே தவணையில் கட்டிய பின், 'நோ டியூஸ் சான்றிதழ்' தருமாறு தெளிவாகக் கோருங்கள்.
அவரிடம் இருந்தும் உரிய பதில் வரவில்லை என்றாலோ அல்லது அவர் அளித்த பதில் உங்களுக்கு திருப்தி தரவில்லை என்றாலோ, குறைதீர் ஆணையரது இந்தச் சுட்டியில், https://cms.rbi.org.in போய் புகார் அளிக்கலாம்.
வங்கிகள், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை அவ்வளவு சீக்கிரத்தில் இழக்க விரும்பாது. நீங்கள் பொன் முட்டை இடும் வாத்து. ஆனால், நீங்கள் தான் முயன்று வெளியேற வேண்டும்.
அமெரிக்க அதிபர், இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், பங்கு சந்தை தொடர்ந்து சரிகிறது; எப்போது இயல்புநிலை திரும்பும் என்று தெரியவில்லை. தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
சி.கார்த்திகை பாண்டியன், மதுரை.
உங்கள் மொத்த முதலீட்டில் 10 சதவீதமேனும் தங்க முதலீடாக இருப்பது எப்போதும் நல்லது. இப்போதுள்ள சூழல் அப்படியே தொடர்வதற்கு வாய்ப்பில்லை. இந்தியாவுக்கு எப்படி அமெரிக்க சந்தை தேவையோ, அதேபோல் தான் அமெரிக்காவுக்கும் 50 சதவீத இறக்குமதி வரி என்பது அபத்தம்.
நம்மை பணிய வைக்கும் முயற்சி; இரு நாட்டு பொருளாதாரத்தையும் சிதைத்துவிடும். அதனால், இது நீண்ட காலம் தொடர வாய்ப்பில்லை. 6 - 12 மாதங்களில் இந்த நிலைமை மாறலாம்.
ஏதோ ஒரு சமாதானத்துக்கு பின், இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தான பின், நம் பங்கு சந்தை மீண்டும் வீறுகொண்டு எழுவது நிச்சயம். வேண்டுமானால், தங்கத்தில் செய்யப்படும் முதலீட்டை 3 முதல் 5 சதவீதம் வரை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
தங்க இ.டி.எப்.,களில் முதலீடு செய்யலாம். பங்கு சந்தையில் இருந்தும் முழுமையாக விலக வேண்டாம். எஸ்.ஐ.பி., முறையில் வலுவான நிறுவன பங்குகளை வாங்கி போடுங்கள்.
ரயில் டிக்கெட் வாங்கும்போது, அதில் பயணக் காப்பீடு என்று 45 பைசா பிடித்தம் செய்யட்டுமா என்று கேட்கப்படுகிறதே. இதனால் பயன் உண்டா?
சி.ரவீந்திரன், திருப்பூர்.
இதற்கு, 'ஆப்ஷனல் பயண காப்பீடு திட்டம்' என்று பெயர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, 45 பைசா பிரீமியம் பிடித்துக் கொள்ளலாமா என்று கேட்கப்படும். ஆம் என்று பதில் அளித்தால், உங்கள் டிக்கெட் கட்டணத்தோடு இந்த தொகையும் பிடித்தம் செய்யப்படும்.
பாலிசி விபரங்கள் உங்கள் இ - மெயிலிலும் குறுஞ்செய்தியாகவும் வரும். அதில் வழங்கப்பட்டுள்ள சுட்டியை பயன்படுத்தி, யார் நாமினியோ அவரது விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும். இந்தக் காப்பீடு, அந்த ஒரு பயணத்திற்கே பொருந்தும்; பயணத்தை ரத்து செய்தால் பிரீமியம் திரும்ப வழங்கப்படாது.
ரயில் பயணத்தின் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்புக்கு 10 லட்சம், நிரந்தர முழுமையான ஊனத்துக்கு 10 லட்சம், நிரந்தர பகுதியளவு ஊனத்துக்கு 7.5 லட்சம், மருத்துவமனை செலவுக்கு 2 லட்சம், சடலத்தை எடுத்துச் செல்லும் செலவுக்கு 10,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும்.
சமீபத்தில் பார்லிமென்டில் இதன் பயன் பற்றி அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்த தகவல் ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தக் காப்பீட்டின் கீழ், 333 கோரிக்கைகளுக்கு 27.22 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 45 பைசா செலவில் இவ்வளவு பெரிய காப்பீடு பாதுகாப்பு கிடைப் பது மிகப்பெரிய வரப்பிரசாதம்.
பழைய வரி விதிப்பு, புதிய வரி விதிப்பு, இரண்டில் எதை எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும் என்பதை என்னால் முடிவு செய்ய முடியவில்லை. என்ன செய்வது?
ஆ.மாதேஸ்வரன், கோவை.
என் பட்டய கணக்காள நண்பர் ஒருவர் எளிய உத்தி ஒன்றை சொன்னார். அதாவது, '80சி, 80டி' உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஒருவர் கோரும் மொத்த வருமான வரி விலக்கு 4 லட்சம் ரூபாய்க்கு கீழே இருக்குமானால், அவர் புதிய வரி விதிப்பு முறைக்கு நகர்வது லாபம் தரும். 4 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்குமானால், பழைய வரி விதிப்பு முறையில் இருப்பது நலம்.
இது தோராயமான கணக்கு தான். ஒவ்வொருவரும் தத்தமது வருவாயை இரண்டு விதங்களிலும் கணக்கிட்டு பார்த்து, எது தங்களுக்கு லாபம் தருகிறது என்பதை ஒட்டியே முடிவுக்கு வர வேண்டும். நல்ல ஆடிட்டரை கலந்தாலோசியுங்கள்.
ரெப்போ விகிதத்தை ஆர்.பி.ஐ., குறைக்கவில்லையே? வீட்டுக் கடன் வாங்குவதை இன்னும் சிறிது காலம் தள்ளிப் போடலாமா?
சவுந்திரபாண்டியன், வாட்ஸாப்.
பணக்கொள்கை கூட்டத்துக்கு பிறகு பேசிய ஆர்.பி.ஐ., கவர்னர் ஒரு விஷயத்தைச் சொன்னார். முந்தைய மூன்று கூட்டங்களின் வாயிலாக குறைக்கப்பட்ட 1 சதவீத ரெப்போ விகிதம், 'இப்போது தான் மெல்ல மெல்ல பொதுமக்களிடம் போய் சேர்கிறது' என்றார்.
ஆக, வங்கிகள் இன்னும் முழு பலனை மக்களுக்கு கொடுக்கவில்லை என்று அர்த்தமாகிறது. இன்னும் கால் சதவீத வட்டி குறையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்று தோன்றினால் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வாங்கிய பிறகு வட்டி கணிசமாக குறையுமானால், இருக்கும் வங்கியிலேயே 'மாற்றுக் கட்டணம்' செலுத்தி, வட்டியை குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது குறைந்த வட்டி தரும் வேறு வங்கிக்கு மா றிக் கொள்ளுங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
ph 98410 53881