/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: சில வங்கிகளில் 'மினிமம் பேலன்ஸ்' அதிகமாக இருப்பது ஏன்?
/
ஆயிரம் சந்தேகங்கள்: சில வங்கிகளில் 'மினிமம் பேலன்ஸ்' அதிகமாக இருப்பது ஏன்?
ஆயிரம் சந்தேகங்கள்: சில வங்கிகளில் 'மினிமம் பேலன்ஸ்' அதிகமாக இருப்பது ஏன்?
ஆயிரம் சந்தேகங்கள்: சில வங்கிகளில் 'மினிமம் பேலன்ஸ்' அதிகமாக இருப்பது ஏன்?
ADDED : ஜூன் 02, 2025 01:13 AM

பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்புத் திட்டங்களை பரிந்துரைக்க முடியுமா?
சதீஷ்குமார், கடலுார்.
பெண் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக இருப்பது செல்வமகள் சேமிப்புத் திட்டம். 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் பெற்றோரோ, பாதுகாவலரோ இந்த கணக்கைத் துவங்கலாம்; 15 ஆண்டுகள் வரை சேமிக்க முடியும். சிறுசேமிப்புத் திட்டங்களிலேயே இதற்குத் தான் அதிகபட்ச வட்டியாக, 8.20 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
பெண்ணுக்கு 10 வயது ஆன பின்தான் பல பெற்றோருக்கு, மகளது எதிர்காலத்துக்கு சேமிக்க வேண்டுமே என்று திடீர் ஞானோதயம் பிறக்கும். இவர்களுக்கு உதவும் விதமாகவும் சில வசதிகள் உள்ளன.
பல பொது, தனியார் துறை வங்கிகள், குழந்தைகளுக்கான சிறப்பு வைப்பு நிதி, ரெக்கரிங் டிபாசிட் திட்டங்களை வைத்துள்ளன. அதேபோல், பொது வருங்கால வைப்பு நிதியில் 15 ஆண்டுகள் முதலீடு செய்து வரலாம்; 7.10 சதவீத வட்டி கிடைக்கும்.
ரிஸ்க் எடுக்க துணிவுள்ளவர்கள், மியூச்சுவல் பண்டுகளில், சிறுவர்களுக்கான பண்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளில், இவற்றில் பல பண்டுகள், 20 சதவீதத்துக்கு மேல் வருவாய் ஈட்டிக் கொடுத்துள்ளன.
தனியார் துறை ஊழியர்களுக்கான பி.எப்., திட்டத்தின் கீழ் கொடுத்து வரும் பென்ஷனில், குறைந்தபட்ச தொகையை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பில் தாமதம் ஏன்?
பி.ராமச்சந்திரன், சென்னை.
தொழிலாளர்களுக்கான பார்லிமென்டரி நிலைக்குழு முதற்கொண்டு எல்லா குழுக்களும், பி.எப்., ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று சொல்லி வருகின்றன. அரசுசாரா, வெளியார் வாயிலாக இந்தத் திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும், டிசம்பர் மாதத்துக்குள் அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.
அனைத்துத் தரப்பினருக்கும் இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயம் புரிகிறது. நிதி அமைச்சகம் உட்பட யாரும் மறுக்கவில்லை. இதற்கான பணம் ஒதுக்க மனம் வேண்டும். டிசம்பர் மாதத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.
ஒருசில பெரிய வங்கிகளில், சேமிப்புக் கணக்கு துவங்க, குறைந்தபட்ச இருப்புத் தொகையே 25,000, 50,000 என்று சொல்கின்றனரே, ஏன்?
வ.மணிமேகலை, வாட்ஸாப்.
தனியார் வங்கிகள், பிரீமியம் சேவைகள் வழங்குவதை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளன. தங்களுக்கு உயர் வருவாய் பிரிவு வாடிக்கையாளர்கள் மட்டுமே போதும் என்ற எண்ணத்துக்கு அவை வந்துவிட்டன.
அதனால் தான், சேமிப்புக் கணக்குகளுக்கே இவ்வளவு அதிகமான இருப்பு வைக்கவேண்டும் என்று கோருகின்றன. ஆனால், இத்தகைய அணுகுமுறை சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை மறைமுகமாக ஏற்படுத்துகின்றன.
அனைவருக்கும் வங்கிச் சேவை வழங்குவதே நம் நாட்டின் நோக்கம். ஒரே வங்கியில் பல்வேறு பிரிவினருக்கு ஏற்ப, பல்வேறு கணக்குகளும், சேவைகளும் வழங்கப்பட்டால் தான் சமூகத்துக்கு பயன் இருக்கும். ஏழையும், பணக்காரனும் புழங்கும் ஒருமித்த தளமாக வங்கிகள் இயங்க வேண்டும் என்பதை ஆர்.பி.ஐ., கவனிக்க வேண்டும்.
ஆண்டு வருவாய் எவ்வளவு இருந்தால், வருமான வரி படிவம் தாக்கல் செய்ய வேண்டும்?
கிளாரன்ஸ் மார்ட்டின்,
திண்டுக்கல்.
கடந்த 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரியை இந்த ஆண்டு செலுத்துவீர்கள் அல்லவா? அப்போது, பழைய வரித்திட்டத்தின்படி, ஆண்டு வருவாய் 2.50 லட்சத்துக்கு மேலும்; புதிய வரித்திட்டத்தின் படி, 3 லட்ச ரூபாய்க்கு மேலும் இருந்தால், வரி செலுத்த வேண்டியிருந்தாலும் இல்லாவிட்டாலும் வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த மொத்த வரம்புக்குள் வருவாய் இருந்தால், படிவம் தாக்கல் செய்ய வேண்டாமா என்றால், வேண்டாம். ஆனால் இதிலும் சில அம்சங்களைப் பார்க்க வேண்டும்.
உதாரணமாக, ஒருவர், பல்வேறு சேமிப்புக் கணக்குகளில், கடந்த ஆண்டில், ஒட்டுமொத்தமாக 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தைப் போட்டிருந்தால்; 1 கோடி ரூபாய் வரை பல்வேறு நடப்புக் கணக்குகளில் பணம் போட்டிருந்தால்; அவர் சார்ந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை அல்லது மொத்த வரவினங்கள் 60 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால்; தொழில்வல்லுநராக அவர் 10 லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியிருந்தால், வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், ஆண்டு முழுவதும் கட்டிய மின்சார கட்டணம் 1 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருந்தால்; அவரது வருவாயில் 25,000 மற்றும் அதற்கு மேல் டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்பட்டிருந்தால்; வெளிநாட்டில் அவரது பெயரில் சொத்து இருந்தால் அல்லது அதுபோன்ற சொத்து ஒன்றின் பலன் பெறுபவராக இருந்தால்; கடந்த ஆண்டில், வெளிநாட்டுப் பயணத்துக்காக 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட்டிருந்தால், அவர் நிச்சயம் வருமான வரிப் படிவம் தாக்கல் செய்தாக வேண்டும்.
மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி., என்றால் என்ன? அதில் ஏதேனும் வகைகள் உண்டா?
ஆ.விமலாபால், சென்னை.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட பண்டுத் திட்டத்தில் முதலீடு செய்து வருவதையே 'சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்று மியூச்சுவல் பண்டு உலகில் அழைப்பர். முதலீடு செய்வதை பழக்கமாக மாற்றும் 'ரெகுலர் எஸ்.ஐ.பி.,' வழிமுறை இது. இதிலேயே பல்வேறு வகைகள் உள்ளன.
'பிளெக்சிபிள் எஸ்.ஐ.பி.,'யில் குறிப்பிட்ட தொகையைத் தான் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை. அந்த மாதத்தில் எவ்வளவு போட முடியுமோ, அது கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தாலும் போடலாம்.
மாதாமாதம் செலுத்தக் கூடிய பணத்தை, ஆண்டுதோறும் பத்து, பத்து சதவீதமாக உயர்த்திக்கொண்டே போவதற்கு 'ஸ்டெப் அப் எஸ்.ஐ.பி.,' என்று பெயர்.
'ட்ரிக்கர் எஸ்.ஐ.பி.,' கொஞ்சம் வித்தியாசமானது. பங்குச் சந்தையைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள், எப்போது சந்தை உயரும், சரியும் என்பதை முன்கூட்டியே கணித்து, அந்த சமயங்களில் முதலீடு செய்யவோ அல்லது முதலீட்டை எடுக்கவோ விதிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம்.
முதலில் ரெகுலர் எஸ்.ஐ.பி.,யில் ஆரம்பித்தாலே போதுமானது. அதுவே சொத்து உருவாக்கத்தில் பெரிய பங்கை வகிக்கும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881