/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: தனியார் செயலி வாயிலாக 'பிக்சட் டிபாசிட்' செய்வது பாதுகாப்பா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: தனியார் செயலி வாயிலாக 'பிக்சட் டிபாசிட்' செய்வது பாதுகாப்பா?
ஆயிரம் சந்தேகங்கள்: தனியார் செயலி வாயிலாக 'பிக்சட் டிபாசிட்' செய்வது பாதுகாப்பா?
ஆயிரம் சந்தேகங்கள்: தனியார் செயலி வாயிலாக 'பிக்சட் டிபாசிட்' செய்வது பாதுகாப்பா?
ADDED : ஆக 17, 2025 11:02 PM

நான் வங்கியில் 8.40 சதவீதத்தில், 240 மாதங்களுக்கு வீட்டுக் கடன் வாங்கியிருந்தேன். இப்போது அவர்களிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை இணைத்துள்ளேன். இதை எப்படி புரிந்து கொள்வது?
ஜெ.சக்திவேலன், சென்னை
குறுஞ்செய்தியை பார்த்தேன். 8.40 சதவீதத்தில் இருந்து 7.90 சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் முதல் அமலுக்கு வரும். ஆர்.பி.ஐ., ஒரு சதவீத அளவுக்கு ரெப்போ விகிதம் குறைத்துள்ள நிலையில், உங்களுக்கு அரை சதவீதப் பலன் கிடைத்துள்ளது.
மேலும், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 219 மாதங்கள் என்று குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்போது நீங்கள் கடன் பெற்றீர்கள் என்பதை தெரிவிக்கவில்லை. நீங்கள் 21 மாத இ.எம்.ஐ., தவணைகளைச் செலுத்தியுள்ளீர்கள் என்று இதன் வாயிலாகப் புரிந்து கொள்கிறேன்.
இந்த ஆண்டு கடைசி வரை காத்திருங்கள். இன்னும் கால் சதவீத வட்டி குறைப்பு இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அமெரிக்காவிலும் செப்டம்பரில் வட்டி குறைப்பு இருக்கலாம் என்று கணிக்கிறார்கள். அதனாலும், நமக்கு கூடுதல் பலன் கிடைக்கலாம். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், வட்டி இன்னும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளோம். தனியார் வங்கியில் வீட்டு கடன் பெற்று உள்ளோம். வட்டி காரணமாக, வேறு அரசு வங்கியில் மாற்றி தருமாறு கேட்டதற்கு, ஓராண்டு முடிந்த பிறகுதான் மாற்ற முடியும் என்று சொல்கின்றனர், இது சரியா?
எஸ். புருஷோத்தமன் ரிதா, பம்மல்
பொதுவாக இப்படியெல்லாம் தடை போட மாட்டர். நீங்கள் கடன் வாங்கிய தனியார் வங்கியின் ஒப்பந்தப் பிரதியை ஒருமுறை மீண்டும் படித்துப் பாருங்கள். ஒருவேளை அதில் 'லாக்-இன்' ஷரத்து உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வெளிப்படையாக அதில் இத்தகைய கட்டுப்பாடு தெரிவிக்கப்பட்டு, நீங்கள் ஒப்புக்கொண்டு கையெழுத்தும் போட்டிருந்தால், ஒன்றும் செய்ய முடியாது.
இது வங்கியின் விதிமுறை என்று ஏதேனும் சால்ஜாப்பு சொன்னால், அதை கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் கடன் வாங்கும்போதே இந்த விபரம் தெரிவிக்கப்பட்டு, உங்களிடம் ஒப்புதல் பெறப்பட்டிருந்தால் மட்டுமே பொருந்தும்.
கடன்காரர்களை எந்த வங்கியும் இழக்க விரும்பாது. நீங்கள் எதிர்பார்க்கும் குறைந்த வட்டிவிகிதம் விரைவில் வழங்கப்பட வாய்ப்புள்ளதா என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உடனடியாகவோ, அல்லது அடுத்த ஓராண்டுக்குள்ளோ கூட, கடன் வட்டி விகிதம் குறையாது என்று தெரிந்தால், துணிந்து வேறு வங்கிக்கு மாறிக்கொள்ளுங்கள்.
வைப்பு நிதிக்கு என்றே உள்ள ஒரு தனியார் செயலி வாயிலாக முதலீடு செய்வது பாதுகாப்பானதா?
கே. சிவராமன், சென்னை
அனைத்து வங்கிகளின் வைப்பு நிதித் திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைப்பது, ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டு பார்க்க முடிவது, எல்லாவற்றையும் கையடக்க போனிலேயே பார்க்க முடிவது உள்ளிட்ட வசதி கள், நீங்கள் குறிப்பிடும் செயலியில் இருப்பது உண்மை தான்.
ஆனால் ஒரு விஷயம் முக்கியம். வைப்பு நிதியின் பாதுகாப்பு வங்கியில்தான் உள்ளது; செயலியில் இல்லை. வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் வாயிலாக ஒரு வங்கியில் வைக்கப்பட்ட வைப்பு தொகைக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு உண்டு.
ஆனால், செயலி வழியாகச் சென்றாலும், அது வங்கிக்கு தான் போகிறது; செயலி தானாக பாதுகாப்பு தருவதில்லை.
மேலும், இத்தகைய செயலிகள் புதியவை என்பதால், நீண்ட காலம் எவ்வாறு நிலைத்திருக்கும், எதிர்காலத்தில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுமா, உங்கள் தனிப்பட்ட தரவு (data) எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதெல்லாம் இப்போது உறுதியாக சொல்ல முடியாது.
குறிப்பாக மூத்த குடிமக்கள், பென்ஷன் வாங்கும் வங்கியிலேயே வைப்பு நிதி வைப்பது வழக்கமாக இருக்கிறது. அது நம்பிக்கையையும், சேவையையும் எளிதாக்குகிறது. கூடுதல் வட்டி தரக்கூடிய வேறு வங்கிகளுக்கு நகர்வது வெகுசிலரே.
அதனால், உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வங்கியில் நேரடியாகவே வைப்பு நிதித் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். அல்லது அவர்களுடைய இணைய வங்கிச் சேவையின் வாயிலாக முதலீடு செய்யுங்கள்.
செயலிகள் தற்காலிக வசதி தான். ஆனால், பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை என்ற கோணத்தில் பார்த்தால், வங்கியுடன் நேரடி தொடர்பு கொள்ளுதலே சிறந்தது.
என் வயது 63. வங்கி வட்டியும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு முறை முதலீடாக பி.எஸ்.யூ., & பேங்கிங் டெப்ட் பண்டு மற்றும் கில்ட் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் பட்சத்தில், வங்கி வட்டியை விட கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
ஆர்.சுப்புராஜ், மதுரை
உண்டு. ஓராண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டு ஆகிய கால கட்டங்களில் நீங்கள் குறிப்பிடும் பி.எஸ்.யூ & பேங்கிங் டெப்ட் பண்டுகள் தோராயமாக, முறையே 8.50, 8.25, 7.75 சதவீதத்துக்கு மேல் வருவாய் ஈட்டியிருக்கின்றன.
கில்ட் மியூச்சுவல் பண்டுகளும், இதே காலகட்டத்தில் முறையே, 5.25, 8.00, 7.25 சதவீதத்துக்கு மேல் ரிட்டர்ன் தந்துள்ளன. வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்களில் 6.50 சதவீதத்துக்கு மேல் வட்டி கிடைக்காத நிலையில், இவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்னுடைய மியூச்சுவல் பண்டு ஆலோசகர், 'டாப் பர்ஃபாமிங்' பண்டுகளையே எப்போதும் பரிந்துரை செய்கிறார். அது எப்போதும், முதல் நிலையிலேயே இருக்குமா, என்ன?
அருணகிரி, விழுப்புரம்
இருக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை. அதனால் எப்போதும் 'வெற்றியாளரை' நோக்கியே ஓடக் கூடாது. ஆலோசகர் அவரது பணியைப் பார்க்கிறார். ஆனால், நீங்கள் உங்களுடைய ஆய்வையும் செய்ய வேண்டும்.
உதாரணமாக, லார்ஜ் கேப் பண்டுகளை எடுத்துக்கொண்டால், ஒரு குறிப்பிட்ட பண்டு, 3,5,10 ஆண்டு காலகட்டத்தில் எத்தகைய வருவாயை ஈட்டியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். அது கேட்டகரி சராசரியை விட அதிகமாக இருக்கி றதா என்றும் கவனிக்க வேண்டும் .
ஒருமுறை மட்டும் வெற்றி பெற்றால் போதாது, வருவாய் ஈட்டுதல் என்பது தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும். அதாவது, பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்த காலத்திலும், ஒரு குறிப்பிட்ட பண்டு நல்லபடியாக வருவாய் ஈட்டியிருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.
இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. எதற்காக ஒரு மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்களோ, அந்த இலக்குக்கு தேவையான பணம் திரண்டுவிட்டால், நீங்கள் வெளியேறிவிடுவது தான் புத்திசாலித்தனம்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881