/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரிலையன்ஸ் ஜியோ ஐ.பி.ஓ., 2026 ஜூனுக்குள் வர திட்டம்
/
ரிலையன்ஸ் ஜியோ ஐ.பி.ஓ., 2026 ஜூனுக்குள் வர திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ஐ.பி.ஓ., 2026 ஜூனுக்குள் வர திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ஐ.பி.ஓ., 2026 ஜூனுக்குள் வர திட்டம்
UPDATED : ஆக 30, 2025 10:37 AM
ADDED : ஆக 30, 2025 02:11 AM

புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அடுத்தாண்டு ஜூன் மாதத்துக்கு முன்னதாக, ஐ.பி.ஓ., வாயிலாக, பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 48வது ஆண்டு பொது கூட்டத்தை முன்னிட்டு, வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் பேசியதாவது: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சந்தாதாரர் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டு மக்கள்தொகையை காட்டிலும் இது அதிகம். இதில் 19.10 கோடி பேர் 5ஜி பயனாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாண்டு ஜூன் மாதத்துக்கு முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக நிதி திரட்டி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பிடக்கூடிய வகையில், ஜியோ நிறுவனத்தால் மதிப்பை உருவாக்க முடியும் என்பதை இந்த ஐ.பி.ஓ., உணர்த்தும். அதே நேரத்தில் வலுவான முதலீட்டு வாய்ப்பையும் வழங்கும்.
செயற்கை நுண்ணறிவு தான் ரிலையன்ஸ் குழுமத்தின் அடுத்த வளர்ச்சி இயந்திரம். எனவே, ஏ.ஐ.,யால் இயக்கப்படும் மனித உருவ ரோபாட்டிக்சில் முதலீடு செய்யப்படும். இது, தொழிற்சாலைகள், வினியோக தொடர் மற்றும் சுகாதார துறைகளில் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா, எந்த ஒரு நாட்டின் வளர்ச்சி திட்டங்களையும் காப்பி அடிக்கத் தேவையில்லை. இந்தியாவை முன்னிலைப்படுத்தும் வளர்ச்சி திட்டங்களை உருவாக்கும் திறமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த திட்டம், நாட்டின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்; நாட்டு மக்கள் அனைவரது வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தும்; சுற்றுச்சூழலை பாதுகாக்கும். - முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குழும தலைவர்
மெட்டா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள், இந்திய வணிகத்துக்கு உதவும் வகையில், ஓப்பன் சோர்ஸ் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை வழங்க உள்ளன. மெட்டாவின் லாமா போன்ற ஏ.ஐ., மாதிரிகள் மனித திறனை மேம்படுத்தி, உற்பத்தித்திறனை அதிகரித்து, படைப்பாற்றலை ஊக்குவிக்கின்றன. ரிலையன்ஸ் வாயிலாக, இதை இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்ல முடியும். ஒவ்வொரு வணிகத்தின் தனித்துவமான தேவைகளுக்கும் ஏற்ப இதை வடிவமைக்கலாம். - மார்க் ஜூக்கர்பெர்க் மெட்டா சி.இ.ஓ.,
கூகுள் வணிகத்துக்கு எப்போதுமே ஒரு சிறப்பான இடமாக இந்தியா இருந்து வருகிறது. உலகின் மிகவும் செயல்திறன் மிக்க வணிகங்கள், செழிப்பான ஸ்டார்ட் அப் கட்டமைப்பு மற்றும் நம்பமுடியாத அளவு படைப்பாற்றல் மற்றும் கனவுகளுக்கு பிறப்பிடமாக விளங்குகிறது. ஜியோ நிறுவனம் வாயிலாக இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு மலிவு விலையில் இணையதள சேவை வழங்கப்பட்டது. இதை மேலும் வலுப்படுத்த செயற்கை நுண்ணறிவு துறையில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. - சுந்தர் பிச்சை கூகுள் சி.இ.ஓ.,