/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பங்குச் சந்தை குறியீடுகளை புரிந்து கொள்வது எப்படி?
/
பங்குச் சந்தை குறியீடுகளை புரிந்து கொள்வது எப்படி?
பங்குச் சந்தை குறியீடுகளை புரிந்து கொள்வது எப்படி?
பங்குச் சந்தை குறியீடுகளை புரிந்து கொள்வது எப்படி?
ADDED : மார் 04, 2024 12:38 AM

பங்கு முதலீடு தொடர்பான அலசலில், குறியீடு எண்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதும் முக்கிய அம்சமாகிறது.
பங்குச் சந்தை தொடர்பான செய்திகளில், குறியீடு எண்கள் பற்றி தவறாமல் குறிப்பிடப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். குறியீடு என்பது பங்குச் சந்தையின் அல்லது அதன் ஒரு பகுதியின் செயல்பாட்டை அளவிடக்கூடிய சாதனமாக அமைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளின் தொகுப்பாக இது அமைகிறது.
இந்தியாவை பொருத்தவரை, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிப்ட் முக்கிய குறியீடாக அமைகிறது. இவை தவிர துறை சார்ந்த பல குறியீடுகளும் உள்ளன.
என்ன பலன்?
சந்தை குறியீடுகள் அதிகம் அறியப்பட்டதாக இருந்தாலும், அவற்றின் பலன் சரியாக புரிந்து கொள்ளப்படாததாகவே இருக்கிறது. பொதுவாக நோக்கும் போது, குறியீடு என்பது சந்தையின் போக்கை, அதன் ஏற்ற இறக்கத்தை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது.
குறியீடு எண்ணிற்கு ஏற்ப, சந்தையின் போக்கு ஏறுமுகமா அல்லது இறங்குமுகமா என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த ஏற்ற இறக்கம் பெரிதாக இருந்தால், சந்தையின் உயர்வு அல்லது சரிவுக்கு என்ன காரணம் என அலசி ஆராயப்படலாம். இந்த வகையில் சந்தை குறியீடு அடிக்கடி கவனத்தை ஈர்ப்பதாகவும் அமைகிறது.
எனினும், ஒரு முதலீட்டாளருக்கு சந்தை குறியீட்டால் என்ன பயன்? சராசரி முதலீட்டாளர்கள் குறியீட்டை எப்படி அணுக வேண்டும்? குறியீடு எண்ணை கொண்டு மட்டுமே முதலீடு முடிவுகளை மேற்கொள்ள முடியாது என்றாலும், இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது பங்கு அலசலில் கைகொடுக்கும்.
சந்தை குறியீட்டின் முதன்மை நோக்கம், சந்தையின் போக்கை உணர்த்துவது என்றாலும், இதை கடந்தும் அதற்கு பலன் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பங்கு அலசல்
குறியீடு எண் சந்தையின் செயல்பாட்டை உணர்த்தினாலும், தனி பங்குகளின் நிலையை உணர்த்துவதாக அமைவதில்லை. குறியீட்டின் போக்கை மீறி அதன் குறிப்பிட்ட பங்குகள் வேறுவிதமாக அமையலாம்.
உதாரணமாக குறியீடு உயரும் போது அதன் உள்ளடக்கத்தில் உள்ள குறிப்பிட்ட சில பங்குகள் சரிந்திருக்கலாம். அதே போல, குறியீடு சரிவை காணும் போது ஒரு சில பங்குகள் நல்ல பலனை அளிப்பதாக அமையலாம். இத்தகைய அலசல் பார்வை, நல்ல பலனுள்ள பங்குகளை அடையாளம் காண உதவலாம்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, குறியீடு எண்கள், சந்தையின் வரலாற்று போக்கை உணர்த்துவதாக அமைகின்றன. கடந்த காலங்களில் சந்தை எவ்விதம் செயல்பட்டுள்ளன என்பதை குறியீடு எண்கள் உணர்த்துகின்றன. ஏற்ற இறக்கங்கள், சந்தையின் உள்ளார்ந்த அம்சம் என்பதையும் அழுத்தம் திருத்தமாக புரிந்து கொள்ள இது உதவும்.
இந்த வரலாற்று புரிதல், சமகால சூழலை புரிந்து கொண்டு, முடிவெடுக்க உதவுவதோடு, ஏற்ற இறக்கங்களின் போது, சந்தை சுழற்சி தன்மையை மனதில் கொண்டு நிலையாகச் செயல்படவும் வழிகாட்டுகின்றன.
சந்தை முதலீட்டில் பலன் பெற சிறந்த வழி, நீண்ட கால முதலீடு எனும் அடிப்படையையும் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். பங்கு முதலீடு தொடர்பான அணுகுமுறையிலும், முதலீடு தொடர்பான உத்திகளை தீர்மானிப்பதிலும் இது வழிகாட்டும். மேலும், தனிப்பட்ட முதலீட்டாளர்கள் தங்கள் செயல்பாட்டை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும் குறியீடுகள் உதவுகின்றன.

