
3,538 '
வெப்சால் ரெனீயுவபிள்' நிறுவனம், ஆந்திராவில் 8 ஜிகாவாட் திறன் கொண்ட ஒருங்கிணைந்த சோலார் உதிரிபாக உற்பத்தி ஆலையை அமைக்க, 3,538 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. திருப்பதி மாவட்டம், நாயுடுபேட்டை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்த ஆலையை அமைக்க அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கிஉள்ளது.
இதன்படி, இந்த ஆலையில் நான்கு ஜிகாவாட் திறனுக்கு, சோலார் செல் உற்பத்தியும்; நான்கு ஜிகாவாட் திறனுக்கு, சோலார் மாட்யூல் உற்பத்தியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால், 2,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 120 ஏக்கரில் அமைக்கப்படும் இந்த ஆலையில், வரும் 2028 ஜூலை மாதத்துக்குள் இரண்டு கட்டங்களாக உற்பத்தி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
550
ரியல் எஸ்டேட் தொடர்பான ஆலோசனைகள் வழங்கி வரும் 'அனராக்', திட்ட மேலாண்மை மற்றும் பொறியியல் சேவைகள் வழங்கும் வணிகத்தில் நுழைந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த இந்நிறுவனம், தன் வணிகத்தை பல்வகைப்படுத்தும் முயற்சியாக இதை மேற்கொண்டுள்ளதாகவும், ரியல் எஸ்டேட் தொடர்பான அனைத்து வகையான சேவைகளையும், ஒரு குடையின் கீழ் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
“புதிய வணிகத்தில் ஏற்கனவே 42 ஆர்டர்களை பெற்றுள்ளோம்; இதன் மதிப்பு 80 கோடி ரூபாய். அடுத்த நிதியாண்டில் இந்த வணிகத்தின் மொத்த வருவாய், 125 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் செயல்பாடுகளுக்காக புதிதாக 550 பணியாளர்களை பணியமர்த்தியுள்ளோம்,” என அனராக் தலைவர் அனுஜ் பூரி தெரிவித்துள்ளார்.

