'தொழில்நுட்ப வளர்ச்சியே இனி காப்பரின் விலையை தீர்மானிக்கும்'
'தொழில்நுட்ப வளர்ச்சியே இனி காப்பரின் விலையை தீர்மானிக்கும்'
UPDATED : ஜன 28, 2026 02:41 AM
ADDED : ஜன 28, 2026 02:03 AM

செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்புத் துறைகளின் வளர்ச்சி காரணமாக, வரும் 2040ம் ஆண்டுக்குள் உலகளவில் காப்பருக்கான தேவை 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என சர்வதேச தர ஆய்வு நிறுவனமான, 'எஸ் அண்டு பி குளோபல்' அறிக்கை வெளியிட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
*காப்பருக்கான தேவை கடந்த 2025ல் 2.8 கோடி மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், வரும் 2040ல் 4.2 கோடி மெட்ரிக் டன்னாக உயரும்
*சுரங்கம் மற்றும் மறுசுழற்சி முறைகளை அதிகப்படுத்தாவிட்டால், ஆண்டுக்கு ஒரு கோடி மெட்ரிக் டன் அளவுக்கு தட்டுப்பாடு நிலவும். அதாவது தேவையில் நான்கில் ஒரு பங்கு பூர்த்தி செய்யப்படாது.
* சிறந்த மின்கடத்தித் திறன், துருப்பிடிக்காத பண்பு மற்றும் எளிதில் வளைந்து கொடுக்கக்கூடிய தன்மை ஆகியவற்றால் கட்டுமானம், போக்குவரத்து, தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறைகளில் காப்பர் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
* கடந்த பத்து ஆண்டுகளில் மின்சார வாகனங்கள் துறையில் காப்பருக்கான தேவை அதிகரித்தது. ஆனால், இனி வரும் காலங்களில் ஏ.ஐ., பாதுகாப்புத் துறை, ரோபோட்டிக்ஸ் ஆகியவற்றுக்கு காப்பர் தேவை அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏன் இந்த உயர்வு?
* கடந்த ஆண்டில் மட்டும், 5.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 100க்கும் மேற்பட்ட புதிய தரவு மைய திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு, அதிகப்படியான காப்பர் தேவைப்படுகிறது.
* உக்ரைன் போர் மற்றும் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் பாதுகாப்பு செலவுகளை அதிகரித்துள்ளது.
* 'ஏசி' மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கான வழக்கமான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எங்கெல்லாம் உற்பத்தி?
சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகள் காப்பர் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. சீனா காப்பரை சுத்திகரிப்பதில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா தனது காப்பர் தேவையில் பாதியை இறக்குமதி செய்கிறது.
ஆற்றல் மாற்றத்துக்கான அரசியல் இப்போது வியத்தகு முறையில் மாறியுள்ளது. உலகம் மின்மயமாவதற்கு காப்பர் மிக அவசியமானது. தொழில்நுட்ப வளர்ச்சியே இனி காப்பரின் விலையையும் தேவையையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.
- டான் எர்ஜின், துணை தலைவர், எஸ் அண்டு பி குளோபல்

