ADDED : ஜூலை 20, 2026 02:57 AM

நியுட்ரன்: வணக்கம் அப்பு டவுனு. வீட்ல திரட்டிப்பால் செய்தாங்க. உங்களுக்கு கொண்டுவரலாமுன்னு காத்திருந்து எடுத்துட்டு வந்தேன். லேட்டாயிடுச்சு.
டவுனு: போனவாரம் மூன்று நாள் உங்களுக்கு கொஞ்சம் சாதகமா இருந்துடுச்சுன்னு ஸ்வீட்டோட வந்திருக்கீங்க.
அப்பு: பின்னே என்ன சும்மாவா? ஒரே வாரத்தில் மூன்று நாள்.
நியுட்ரன்: ஹாட்ரிக் அடிச்சிருக்கவேண்டியது. செவ்வாய்க்கிழமை டவுனு உள்ள புகுந்து ஆட்டத்த கலைச்சுட்டாரு.
டவுனு: அப்பப்ப எங்களோட பராக்கிரமத்தையும் காட்டனுமில்ல. ஆனாலும் மூன்று நாள் அப்படீங்கறது சாதனை தான்.
நியுட்ரன்: ரொம்ப பாராட்டாதீங்க. பயமா இருக்கு.
அப்பு: இதுல என்ன பயம்?
நியுட்ரன்: இரண்டு முன்று நாள் என் கையில சந்தை வந்துச்சுன்னா அது கன்சாலிடேஷனுக்கு அறிகுறியா இல்லை சைடுவேஸ் சந்தையா மாறிடுச்சாங்கிற பயம்தான்.
டவுனு: பேருக்கேத்தா மாதிரி வியாபாரத்துல கூட எங்களோட நல்லதையும் யோசிக்கிறீங்க நியுட்ரன். உங்களை அதுக்கு பாராட்டியே ஆகனும். திரட்டிப்பால் டேஸ்ட் பிரமாதமா இருக்கு.
அப்பு: வர்ற வாரத்துல 'இன்ப்ராஸ்ட்ரக்சர் அவுட்புட்', ஹெச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, அன்னிய செலாவணி கையிருப்பு, எம்3 பணப்புழக்கம் போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது.
வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, எஸ்&பி குளோபல் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, வழங்கப்பட்ட கட்டுமானத்திற்கான அனுமதிகள், புதிய வீடுகள் விற்பனை போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகளும் வெளிவர இருக்குது.
நியுட்ரன்: 24,101/23,867 /23,727 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான சப்போர்ட்டும், 24,468/24,601/24,741 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான ரெசிஸ்டென்ஸும் இருக்குது. 24,234- தான் மேலேயா கீழேயாங்குறதை முடிவு செய்யற முக்கிய திருப்பு முனை லெவலா இருக்கும்.
அப்பு: வர்ற வாரம் எப்படியிருக்குமுன்னு சொல்லுங்க நியுட்ரன்.
நியுட்ரன்: இந்த வம்புக்கே நான் வரலீங்க. ஏதோ ஒரு வாரம் அதிர்ஷ்ட வசமா எனக்கு கொஞ்சம் சாதகமா நடந்துடுச்சுன்னா அடுத்த வாரம் பத்தி கணிக்க சொல்றீங்க. நான் கிளம்பட்டா?
டவுனு: அப்படியில்லிங்க. நீங்க பெரிய அனுபவஸ்தர். அதனால உள்ளதை உள்ளபடி சொல்வீங்கன்னுதான்.
நியுட்ரன்: இந்த வாரத்துக்கு இது போதும். அப்பு நீங்க சொல்லுங்க.
அப்பு: நீங்களே சொல்லுங்க டவுனு.
டவுனு: 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வர்ற வாரத்துல வெளிவர இருக்குது. வழக்கம் போல போர் குறித்த செய்திகள், உலக நிகழ்வுகள் போன்றவற்றோட தாக்கம் பெருசா சந்தையில இருக்க வாய்ப்பு இருக்குது. இந்த வாரக்கடைசியில அடுத்த வாரம் நடைபெற இருக்கற எப்&ஓ எக்ஸ்பைரிக்கான நகர்வுகளை எதிர்பார்க்கலாம்.
நியுட்ரன்: எனக்கு வாய்ப்பிருக்குமா? இருக்காதா? அதை விளக்கமா சொல்லுங்க.
டவுனு: ரொம்ப பாசமா திரட்டிப்பாலெல்லாம் கொண்டு வந்து தந்திருக்கீங்க. அதை எப்படி என் வாயால சொல்றது.
நியுட்ரன்: புரிஞ்சுடுச்சு. விட்டுடுங்க.
அப்பு: நியுட்ரன் ரொம்ப ஷார்ப்பான ஆளுங்க.
நியுட்ரன்: புகழ்ந்தது போதும் அப்பு. சந்தை குறித்து உங்க கருத்து என்ன?.
அப்பு: டவுனுவோட கருத்தும் என்னோடதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாத்தான் இருக்குது. ஒரு கூடுதல் எதிர்பார்ப்பு வாராந்திர ரீதியா நிப்டியில பெரிய மாற்றம் இல்லாம இருக்க வாய்ப்பு இருக்குது.
டவுனு: கரெக்ட். ஒரு விஷயத்தை மறந்துடாதீங்க நியுட்ரன். போர் குறித்த செய்திகள் எல்லோரோட எதிர்பார்ப்பையும் புரட்டி போட்டுட வாய்ப்பிருக்கு.
நியுட்ரன்: இதை நீங்க தனியா சொல்லனுமா என்ன. கொஞ்ச நாளா எனக்கு அது பழகிப்போச்சு.
அப்பு: அதுதாங்க அனுபவஸ்தருங்கறது.
டவுனு: ஸ்வீட் கொடுத்தீங்க. வாங்க காரம் காபி சாப்பிடுவோம் - என்று டவுன் சொல்ல மூவரும் ஹோட்டலை நோக்கி கிளம்பினர்.
