ADDED : அக் 26, 2025 09:28 PM

நியுட்ரன்: என்ன டவுனு, வாரக் கடைசியில உங்களுக் கான வாய்ப்பு இருக்குன்னு சொன்னதைப் போலவே, செஞ்சு காட்டீட்டிங்களே! எங்களாலதான் ஒண்ணும் பண்ணமுடியலை...
டவுனு: வியாழக்கிழமை மதியம் வரை அப்புவோட கைதானே ஓங்கியிருந்துச்சு? அன்றைக்கு கடைசியிலதான் வீக்னெஸ் உருவாச்சு. வீக்னெஸ்ஸை கண்டுட்டா எங்களுக்கு கொண்டாட்டம்தானே!
அப்பு: அதான், வியாழக்கிழமை 2:00 மணி வரைக்கு எப்படி கதிகலங்கி பேயடிச்ச மாதிரி இருந்தீங்கன்னு பார்த்தேனே! இப்போதானே நமட்டு சிரிப்பு சிரிக்கறீங்க.
நியுட்ரன்: நடந்து முடிஞ்சத விடுங்க. பழம் பெருமை பேசாம, நடக்கப் போறத பார்ப்போம். சந்தையில பழம்பெருமை பேசி என்ன பிரயோஜனம். வர்ற வாரம் இண்டஸ்ட்ரீயல் புரொடக்ஷன், மேனுபேக்சரிங் புரொடக்ஷன், எம்3 பணப்புழக்கம்.
வங்கிகள் வழங்கிய கடன் மற்றும் அவற்றில் உள்ள வைப்பு நிதியின் வளர்ச்சி, அந்நிய செலாவணி கையிருப்பு இதுமாதிரியான இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்குது. இது தவிர, அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வர இருக்குது.
டவுனு: அமெரிக்க வட்டிவிகித முடிவு வர இருக்கறதால, ஏற்ற இறக்கத்துக்கு பஞ்சமே இருக்காது.
அப்பு: இப்ப இருக்கற நிலைமையில ஒரு இறக்கம் வர்றது நல்லதுதான்.
நியுட்ரன்: என்னங்க அப்பு, நீங்களே இப்படி சொன்னா எப்புடி?
அப்பு: நியுட்ரன் ஒண்ணு நல்லா புரிஞ்சுக்குங்க. தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கறது ஹெல்த்தியான விஷயம் இல்லீங்க. அப்பப்ப சின்ன கரெக்ஷனும் வரணும். நான் காளைக்கு சப்போர்ட்டுங்கிறதால, எப்பவுமே காளைச் சந்தையா இருக்கணுமின்னு ஆசைப்படக் கூடாது. சந்தைங்கிறது எல்லாருக்கும் வாய்ப்பளிக்கும் ஒரு இடம். பல மேடு பள்ளம் நிறைஞ்சது தான் வாழ்க்கை இல்லையா!
டவுனு: ஓவரா லாபம் பார்த்துட்டீங்க போல; பிலாசபியெல்லாம் பிரமாதமா கொட்டுது!
நியுட்ரன்: உங்க ரெண்டு பேரோட வாக்குவாதம் முடியவே முடியாது. சப்போர்ட் ரெசிஸ்டென்ஸை சொல்றேன் கவனமா கேட்டுக்குங்க. வெள்ளிக்கிழமை 25,795-ல நிறைவடைந்த நிப்டியோட வாராந்திர சப்போர்ட் 25,641, 25,487 மற்றும் 25,339 என்ற இடத்தில இருக்குது.
ரெசிஸ்டென்ஸ் 25,920, 26,045 மற்றும் 26,131 என்ற இடத்துல இருக்குது. 25,819 என்பது ஏற்றம் தொடர்வதற்கு முக்கிய திருப்புமுனையா இருக்கும். இதைத்தாண்டி மேலே போய், அதிக வால்யூமோட நடந்தா, சந்தை ஹெல்த்தியா மேலே போகுதுன்னு வச்சுக்கலாம்.
அப்பு: என்ன நியுட்ரன் சந்தையில வேலை இல்லேன்னதும், சார்ட்டை சல்லடை போட்டு அலசி ஆராய்ச்சுட்ட மாதிரி இருக்கு.
நியுட்ரன்: ஏன் சாரே!
அப்பு: 1, 7, 9ன்னு கடைசி டிஜிட் முடியற அளவுக்கு துல்லியமா சப்போர்ட், ரெசிஸ்டென்ஸை சொல்றீங்களே அதனாலதான் கேட்டேன்.
டவுனு: நியுட்ரன் ஒரு முக்கிய விஷயத்தை சொல்ல மறந்துட்டீங்க. என். எஸ்.இ.,-ல அக்டோபர் மாத எப் & ஓ கான்ட்ராக்ட்கள் செவ்வாய்க்கிழமை நிறைவடைய இருக்குது. அன்னைக்கு சந்தையில ஆக்ஷனுக்கு பஞ்சமிருக்காது.
அப்பு: அது சரி! அதுக்கப்புறம் புதன்கிழமை நியுட்ரனோட பங்களிப்பு சந்தையில இருக்குமுன்னு எதிர்பார்க்கலாமுங்களா? ஒருநாள் திசைதெரியாம போய், அதற்கு பின்னால் தெளிவா நகர வாய்ப்பு இருக்குதோ?
அப்பு இப்படி கேட்டதை நியுட்ரன் காதில் வாங்கிக்கொள்ளாமல், 'வீட்டுல கோவிலுக்கு போகணுமின்னு சொன்னாங்க. இப்ப கிளம்பினாத்தான் சரியா இருக்கும்' என்று சொல்லியபடி வேகமாகக் கிளம்ப, மூவரும் கலைந்தனர்.
அப்பப்ப சின்ன கரெக்ஷனும் வரணும். எப்பவுமே காளைச் சந்தையா இருக்கணுமின்னு ஆசைப்படக்கூடாது

