பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களை ஒன்றிணைக்க அரசு மீண்டும் முயற்சி
பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களை ஒன்றிணைக்க அரசு மீண்டும் முயற்சி
UPDATED : நவ 24, 2025 12:32 PM
ADDED : நவ 24, 2025 12:53 AM

மத்திய நிதியமைச்சகம், மூன்று பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் பணியை மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2020ல் இந்த யோசனை கைவிடப்பட்டது.
ஓரியன்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய மூன்று பொதுத்துறை பொது காப்பீடு நிறுவனங்களும் இந்த பட்டியலில் அடங்கும். இவற்றை ஒரே நிறுவனமாக இணைக்கும் யோசனையை, நிதியமைச்சகம் மீண்டும் பரிசீலிக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிறுவனங்களின் நிதி நிலை தற்போது மேம்பட்டிருப்பதால், இவற்றை இணைப்பதன் வாயிலாக சிறந்த செயல் திறன் மற்றும் செயல்பாட்டு விரிவாக்கத்தை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், ஒரு பொதுத்துறை பொது காப்பீடு நிறுவனத்தை தனியார்மயமாக்கும் யோசனையும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. பொது காப்பீடு துறையில் அரசின் குறைந்தபட்ச பங்கு 51 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து விலக்களிக்கும் சட்டம், கடந்த 2021ல் பார்லிமென்ட்டில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது.

இதனிடையே, காப்பீடுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு வரம்பை தற்போதுள்ள 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரிக்க வகை செய்யும் மசோதாவை, அடுத்த மாதம் துவங்கவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.

