கேளுங்கள்: புற்றுநோய்க்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு இருக்கிறதா?
கேளுங்கள்: புற்றுநோய்க்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு இருக்கிறதா?
UPDATED : அக் 19, 2026 02:25 AM
ADDED : அக் 18, 2026 09:26 PM

வாராவாரம் நமக்கு தெரிந்த யாரோ ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக கேள்விப்படுகிறோம். அந்த குடும்பத்துக்கு ஏற்படும் அதிர்ச்சி, அறுவை சிகிச்சை செலவுகள், அதை தொடர்ந்து மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக நீடிக்கக்கூடிய சிகிச்சை, வருமான பாதிப்பு, வேலை இழப்பு, அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் , பயம், கவலை என்று புற்றுநோய் தொடர்பான சோகமான அனுபவங்கள் கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பரிச்சயமாகிவிட்டன.
புற்றுநோய் பற்றிய செய்திகள் இவ்வளவு அதிகமாக கேட்பதற்கு என்ன காரணம்? புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது, அதற்கு சிகிச்சை அளிப்பதில் முக்கியமானது என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
பரிசோதனைகளும் முன்கூட்டியே நோயை கண்டறியும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன. சிகிச்சை முறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் புற்றுநோய் கண்டறியப்படுவது, அதற்கு சிகிச்சை அளிப்பது, குணமடைவது பற்றிய செய்திகளை அடிக்கடி கேட்கிறோம்.
சரி, புற்றுநோய்க்கான இன்சூரன்ஸ் பாதுகாப்பு எப்படி இருக்கிறது? அது நிழலா? நிஜமா?
பொதுவாக, நம்மிடம் இருக்கும் மருத்துவமனை சிகிச்சைக்கான இன்சூரன்ஸ் பாலிசியில் புற்றுநோய்க்கான சிகிச்சை செலவுகளும் கவர் செய்யப்படும். இதற்கும் விதிமுறைகள், நிபந்தனைகள், விதி விலக்குகள் இருக்கின் றன. அவற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
மாதாந்திர தொகை
இந்த பாதுகாப்புக்கு மேலாக, புற்றுநோய்க்கென்றே வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட பாலிசிகளையும் வாங்கலாம். உதாரணமாக,'நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனத்தின் 'கேன்சர் கார்டு' பாலிசி புற்றுநோய்க்கான சிகிச்சை செலவுகளை ஈடுசெய்யும். நம்மிடம் ஏற்கனவே இருக்கும் 'ஹெல்த் இன்ஷூரன்ஸ்' பாலிசியுடன் சேர்த்து, கூடுதல் நிதி பாதுகாப்பாக இதை பயன்படுத்தலாம்.
இதேபோன்ற பாதுகாப்பு அளிக்கும் பாலிசிகளில் 'ஸ்டார் ஹெல்த்' நிறுவனத்தின் 'கேன்சர் கேர் பிளாட்டினம்' , 'ஹெச்.டி.எப்.சி., எர்கோ' நிறுவனத்தின் 'ஐகேன்' போன்றவையும் அடங்கும். ஆனால், இவற்றின் பாதுகாப்பும் தகுதி நிபந்தனைகளும் ஒன்றுபோல் இருக்காது.
இதுவரை நாம் பார்த்த மருத்துவமனை சிகிச்சைக்கான பாலிசிகளும், புற்றுநோய்க்கான சிகிச்சை செலவுகளை ஈடுசெய்யும் பாலிசிகளும், உண்மையில் செலவு செய்த தொகையை அதற்கான பில்களின் அடிப்படையில் ஈடுசெய்யக்கூடியவை. இனசூரன்ஸ் மொழியில் இவற்றை 'இண்டெம்னிட்டி' பாலிசிகள் என்று சொல்வார்கள்.
ஆனால், நாம் எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்பதற்கும் கிளெய்ம் தொகைக்கும் தொடர்பில்லாத இன்னொரு வகை பாலிசியும் இருக்கிறது. இவற்றை 'பெனிபிட்' பாலிசிகள் என்று சொல்வார்கள். புற்றுநோய்க்கும் இப்படிப்பட்ட பாலிசிகள் உள்ளன. உதாரணமாக, ஹெச்.டி.எப்.சி., லைப் நிறுவனத்தின் 'கேன்சர்', 'ஆதித்ய பிர்லா சன் லைப்' நிறுவனத்தின் 'கேன்சர் ஷீல்டு' போன்றவை. சமீபத்தில் எல்.ஐ.சி., அறிமுகப்படுத்தியுள்ள 'நியூ கேன்சர் கவர்' ஒரு பெனிபிட் வகை பாலிசி. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்ப நிலை அல்லது தீவிர நிலை புற்றுநோய் கண்டறியப்பட்டால், சிகிச்சைக்கு உண்மையில் எவ்வளவு செலவானது என்பதை பொருட்படுத்தாமல், நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.
இதன் கூடுதல் சிறப்பம்சம், தீவிர நிலை புற்றுநோய் கண்டறியப்பட்டால், பொருந்தக்கூடிய காப்பீட்டு தொகையில் 1 சதவீதம் மாத வருமானமாக 10 ஆண்டுகளுக்கு பாலிசிதாரருக்கு வழங்கப்படும். இந்த காலத்தில் காப்பீடு செய்யப்பட்டவர் இறந்துவிட்டாலும், மீதமுள்ள காலத்துக்கான மாத வருமானம் நாமினிக்கு வழங்கப்படும்.
பெனிபிட் பாலிசியில், கிளெய்ம் தொகை நாம் செய்த செலவை பொறுத்தது அல்ல. உதாரணமாக, ஐந்து லட்சம் ரூபாய்க்கான பாலிசியில், குறிப்பிட்ட நிபந்தனைகளின்படி புற்றுநோய் கண்டறியப்பட்டால், ஐந்து லட்சம் ரூபாய் மொத்தமாக வழங்கப்படலாம். முழு தொகையும் வழங்கப்பட்டதும் அந்த பாதுகாப்பு முடிவடையலாம்.
சில பாலிசிகளில் புற்றுநோயின் ஆரம்ப நிலையிலேயே ஒரு பகுதி தொகை வழங்கப்படும். நோய் தீவிரமடைந்தால் மீதி தொகை வழங்கப்படலாம். சிலவற்றில் குறிப்பிட்ட காலத்துக்கு மாதாந்திர தொகையும் கிடைக்கும். இவை அனைத்தும் அந்தந்த பாலிசியின் விதிமுறைகளுக்கு உட்பட்டவை.
எதற்கு பயன்படும்?
எந்த மருத்துவ சிகிச்சையாக இருந்தாலும், இன்சூரன்ஸ் பாலிசியில் கவர் செய்யப்படாத சில செலவுகள் இருக்கும். சில செலவுகளுக்கு வரம்புகளும் இருக்கும். அவற்றை நாம்தான் ஏற்க வேண்டும்.
மேலும், மருத்துவமனைக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து, தங்குமிடம், நோயாளியை பராமரிப்பதற்கான உதவியாளர்கள், சிகிச்சை காலத்தில் நோயாளிக்கோ குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏற்படும் வருமான இழப்பு என்று பல செலவுகளும் இருக்கலாம்.
பெனிபிட் பாலிசியில் கிடைக்கும் தொகை, இப்படிப்பட்ட செலவுகளை சமாளிக்கவும், குடும்பத்தின் சேமிப்பை பாதுகாக்கவும் சரியான நேரத்தில் உதவும்.
அதனால், புற்றுநோய்க்கென்று தனியாக இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன், ஏற்கனவே இருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் என்னென்ன பாதுகாப்புகள் இருக்கின்றன என்பதை ஆராயுங்கள்.
அதற்குமேல் என்ன பாதுகாப்பு தேவை, எவ்வளவு தேவை, எந்த வகையான பாலிசி அதற்கு உதவும் என்று திட்டமிடுங்கள்.
நான் முன்பே சொல்லியிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட ஆபத்தை சமாளிக்க நம்மிடம் போதுமான இன்சூரன்ஸ் இருக்கிறது என்று நம்பிக்கையுடன் இருந்துவிட்டு, அந்த ஆபத்து நேரும்போது பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்று தெரியவந்தால்?

நிஜம் என்று நம்பியது வெறும் நிழலாகிவிடும்.
