ADDED : பிப் 19, 2024 12:15 AM

பேடிஎம் நிறுவனம் தொடர்பான பிரச்னை எழுப்பும் எண்ணற்ற கேள்விகளுக்கு மத்தியில், முக்கிய முதலீடு பாடத்தையும் உணர்த்துகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையின் முக்கிய முகமாக கருதப்பட்ட 'பேடிஎம்' ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் பிரச்னைக்கு உள்ளாகி தடுமாறிக் கொண்டிருக்கிறது. பேடிஎம் பேமென்ட் வங்கியின் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் தாய் நிறுவனமும் விவாதத்திற்கு உள்ளாகி பங்குச் சந்தையில் பாதிப்பை சந்தித்துள்ளது.
பேடிஎம் பிரச்னைக்கான பின்னணி காரணங்கள் ஆழமாக ஆராயப்பட்டு வரும் நிலையில், பல்வேறு விதிமீறல்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த பிரச்னை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பங்குச் சந்தையிலும் இதன் தாக்கம் எதிரொலித்திருக்கிறது.
பங்கு மதிப்பு சரிவு
ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்த முதல் மூன்று நாட்களில், பேடிஎம் பங்கு மதிப்பு மொத்தமாக 43 சதவீதம் சரிந்தது. இந்த இறங்கு முகம் தொடரும் என்ற அச்சமும் நிலவுகிறது. பேடிஎம் பங்குகளில் முதலீடு செய்தவர்களை இந்த போக்கு கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக, 70க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இதன் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. எனவே, மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களும் கவலை அடைந்துள்ளனர். பேடிஎம் விவகாரத்தில் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பது ஒரு பக்கம் இருக்க, நிறுவன பங்குகளின் பாதிப்பு, முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது.
ஒரு நிறுவனம் சர்ச்சைக்கு உள்ளாகி அதன் பங்கு மதிப்பு சரியும் போது, முதலீட்டாளர்கள் வெளியேறி மேலும் நஷ்டத்தை குறைத்துக் கொள்ளலாம் அல்லது மீட்சி ஏற்படும் என காத்திருக்கலாம். பேடிஎம் நிறுவனத்தை பொருத்தவரை மேலும் சரிவு ஏற்படுமா? அல்லது மீட்சி சாத்தியமா? என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.
எப்படி இருந்தாலும், நிதி உட்பட உலகில் நட்சத்திரமாக கருதப்பட்ட பேடிஎம்மின் இந்த நிலை, முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
விரிவாக்கம்
பேடிஎம் பங்கு சரிவை பொருத்தவரை, நிறுவனத்தின் வர்த்தக மாதிரி வலுவில்லாதது என்பதால், இது எதிர்பார்க்கக் கூடியது என்பதே பல வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. நிறுவனத்தின் வர்த்தக மாதிரி புரியவில்லை எனில், அதில் முதலீடு செய்யக்கூடாது எனும் கருத்தையும் இது வலியுறுத்துகிறது.
மேலும், சந்தையில் முன்னணி நிலை மற்றும் வேகமான வளர்ச்சி போன்றவை சந்தை மதிப்பை உயர்த்த உதவினாலும், லாபம் ஈட்டும் தன்மையே பங்கு மதிப்பை அலச உதவும் என கருதப்படுகிறது. எனினும், இந்த அலசல்கள், பேடிஎம் பங்குகளை வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் எனும் கேள்விக்கான பதிலை மேலும் சிக்கலாக்குகின்றன.
எல்லாவற்றுக்கும் மேல், இது போன்ற சர்ச்சைகளும், சரிவுகளும் தங்களை அதிகம் பாதிக்காமல் இருக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் விரும்பினால், பங்கு முதலீட்டில் பரவலாக்கத்தின் அவசியத்தை உணர்ந்திருக்க வேண்டும்.
அதிக பலன் தரும் பங்குகளை தேடிச் செல்வதை விட, முதலீட்டாளர்கள் பல்வேறு துறைகள் சார்ந்த பங்குகள் கொண்ட சமநிலை வாய்ந்த முதலீடு தொகுப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய சமநிலை பெற்றிருந்தால், ஒரு பங்கு சரிவை ஏற்படுத்தினாலும் மற்ற பங்குகள் பாதுகாப்பு அளிக்கும் என்பதோடு, இடர்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்.

