
முத்துாட் - அமெரிக்க நிறுவனம் டிஜிட்டல் சேவை ஒப்பந்தம்
மு த்துாட் பின்கார்ப், முத்துாட் பாப்பச்சன் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்க 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தத்தை யு.எஸ்.டி., நிறுவனம் பெற்றுள்ளது. முத்துாட் குழுமத்துக்கு நாடெங்கும் 29 மாநிலங்களில் 8 நிறுவனங்கள், 22 சேவை மையங்கள், 4,200 கிளைகள் உள்ளன. இவற்றுக்கு கிளவுட், டேட்டா சென்டர் சேவை, ஏ.ஐ., அடிப்படையிலான இணைய பாதுகாப்பு சேவைகளை யு.எஸ்.டி., வழங்கும். முத்துாட் குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தம் வரும் 2031ம் ஆண்டு வரை நடப்பில் இருக்கும்.
' கல்ப் புட் 2026' கண்காட்சியில் இந்திய ஏற்றுமதியாளர்கள்
ஆ ண்டுதோறும் துபாயில் நடைபெறும் 'கல்ப் புட்' உணவு மற்றும் பானங்கள் தொடர்பான வர்த்தக நிகழ்ச்சியில் இவ்வாண்டு இந்தியா, 'பங்குதாரர் நாடாக' இடம்பெறுகிறது. கடந்த 31 ஆண்டு வரலாற்றில் இல்லாத வகையில் துபாயின் இரு இடங்களில் இந்நிகழ்வு நடைபெறுகிறது. அபெடா எனும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தலைமையில் இந்தியாவின் 161 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மொத்தம் 25 மாநிலங்களை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், உழவர் -உற்பத்தியாளர் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், புத்தொழில் நிறுவனங்கள், மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் இவற்றில் இடம்பெறுகின்றன.
3 நானோ மீட்டர் சிப் தயாரிக்க இந்தியா திட்டம்
ந வீன மொபைல், கம்ப்யூட்டர்களில்பயன்படுத்தப்படும் 3 நானோ மீட்டர் அளவிலான உயர் தொழில்நுட்ப சிப்களை 2032ம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வடிவமைப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் 2ம் கட்டத்தின்கீழ் கம்ப்யூட்டர், ரேடியோ அலைவரிசை, நெட்வொர்க்கிங், பவர், சென்சார், மெமரி ஆகிய 6 வகை சிப்களில் கவனம் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக 4 ஆண்டுகளில் இத்துறையின் 75 சதவீத வடிவமைப்பு, உற்பத்தியை நாமே செய்துகொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

