கிடைத்ததோ ரூ.6.64 கோடி கட்டிய வரி ரூ.33 லட்சம் மட்டுமே
கிடைத்ததோ ரூ.6.64 கோடி கட்டிய வரி ரூ.33 லட்சம் மட்டுமே
ADDED : டிச 20, 2024 11:37 PM

புதுடில்லி:பிட்காய்ன் முதலீட்டில் கிடைத்த 6.64 கோடி ரூபாய் லாபத்துக்கு, சட்டத்தின் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திய பெங்களூரு இளைஞர், வெறும் 33 லட்சம் ரூபாய் வரி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு இன்போசிஸ் நிறுவன முன்னாள் ஊழியரான இளைஞர் ஒருவர், 2015 - 16 நிதியாண்டில், தன் ஊதியத்தில் 5 லட்சம் ரூபாய்க்கு பிட்காய்ன் வாங்கினார். 2020-21 நிதியாண்டில், அவரது 5 லட்சம் ரூபாய் 6.69 கோடி ரூபாயாக உயர்ந்தது.
அப்போது பிட்காய்னை விற்பனை செய்த அவர், வீடு வாங்கி விட்டு அதற்காக, வருமான வரிச் சட்டம் 54எப் பிரிவின் கீழ், 4.96 கோடி ரூபாய்க்கு வரி விலக்கு கோரி விண்ணப்பித்தார். மீதமுள்ள தொகைக்கு, நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 20 சதவீதத்தை, அதாவது 33 லட்சம் ரூபாயை செலுத்துவதாக தெரிவித்தார்.
ஆனால், 6.69 கோடி ரூபாயில், 54எப் பிரிவின்படி வரி விலக்கு அளிக்க முடியாது என்றும், பிட்காய்ன் முதலீட்டில் கிடைத்த தொகை, விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட் என்ற வி.டி.ஏ., விதியின்கீழ் வருவதால், அதற்கு 30 சதவீத வரி செலுத்த வேண்டும் என்றும், வருமான வரித் துறை பதிலளித்தது.
இதை எதிர்த்து டெல்லியில் உள்ள, நேஷனல் பேஸ்லெஸ் அப்பீல் டிரிபியூனல் எனப்படும் என்.ஏ.எப்.சி.,யிடம் முறையீடு செய்தார் அந்த இளைஞர். வருமான வரித் துறைக்கு ஆதரவாக தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, ஜோத்பூரில் உள்ள வருமான வரி முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ஐ.டி.ஏ.டி.,) இளைஞர் மேல்முறையீடு செய்தார்.
கடந்த 2022ம் ஆண்டில் இருந்து தான், பிட்காய்ன் முதலீடு, விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட் பிரிவில் சேர்க்கப்பட்டதும், அதற்கு முன்பு வரை கேப்பிடல் அசெட் பிரிவில் இருந்ததால், அதற்கு நீண்டகால மூலதன ஆதாய வரி தான் பொருந்தும் என்றும் வைக்கப்பட்ட வாதத்தை ஐ.டி.ஏ.டி., ஏற்றுக் கொண்டது.
மேலும், மூலதன ஆதாயத்தில் இருந்து வீடு வாங்கியதை இழப்பாக கருதி, 4.96 கோடி ரூபாய்க்கு வரி விலக்கு அளிக்கவும் வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டது.
இதனால், 5 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு ஐந்தே ஆண்டுகளில் கிடைத்த 6.64 கோடி ரூபாய் லாபத்துக்கு, வெறும் 33 லட்சம் ரூபாய் மட்டுமே வருமான வரியாக செலுத்தி, ஜாக்பாட் கோடீஸ்வரராக வலம் வருகிறார், பெங்களூரு இளைஞர்.

