இட்லி, கருவாடுக்கு புவிசார் குறியீடு தமிழக அரசு விண்ணப்பம்
இட்லி, கருவாடுக்கு புவிசார் குறியீடு தமிழக அரசு விண்ணப்பம்
ADDED : செப் 26, 2024 02:40 AM

சென்னை:தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி உட்பட, தனித்துவம் வாய்ந்த ஐந்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக, இந்திய அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்திடம், தமிழக அரசின் 'டி.என்.அபெக்ஸ்' விண்ணப்பம் செய்துள்ளது.
உணவு சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் உதவிகளை, டி.என்.அபெக்ஸ் எனப்படும் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் செய்கிறது. இது, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது ஒரு பகுதி, நகரம் போன்றவற்றுடன் தொடர்புடைய பாரம்பரிய தயாரிப்புகளுக்கு, புவிசார் குறியீடு பெறப்படுகிறது. இதை, அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் வழங்குகிறது. புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருட்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தேவை அதிகரிக்கும்.
அதன்படி, தமிழகத்தின் பாரம்பரியமான மற்றும் தனித்துவமான பொருட்களான இட்லி, ராமநாதபுரம் பட்டரை கருவாடு, செட்டிநாடு கை முறுக்கு, சீடை, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பனைவெல்லம் ஆகிய ஐந்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக, அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்திடம், டி.என்.அபெக்ஸ் விண்ணப்பம் செய்துஉள்ளது.

