ADDED : ஆக 11, 2026 01:41 AM

புதுடில்லி: மிக குறைவாக வரி செலுத்தியவர்கள் அல்லது வரியே முற்றிலும் செலுத்தாதவர்கள் டி.டி.எஸ்., சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை செயல்படுத்துவதற்கான விதிகளை வருமான வரித் துறை உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பார்லி.,யில் தெரிவித்ததாவது:
குறைந்த வரி செலுத்துவோரின் நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், குறைந்த அல்லது பூஜ்ஜிய விகிதத்தில் டி.டி.எஸ்., பிடித்தம் செய்வதற்கான சான்றிதழை ஆன்லைனில் பெற விண்ணப்பிக்கும் வசதி 2026 - 27 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான விதிகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவை விரைவில் அறிவிக்கப்படும்.
வழக்கமாக பிடித்தம் செய்யப்படும் டி.டி.எஸ்., தொகையைவிட ஒருவரின் உண்மையான வரி பொறுப்பு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டால், அதிகமாக வரி பிடித்தம் செய்யப்படுவதை தவிர்க்க குறைந்த அல்லது பூஜ்ஜிய டி.டி.எஸ்., சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள், வருமான வரித்தளத்தில் ஏற்கனவே உள்ள முந்தைய வருமான வரிக் கணக்குகள், ஆண்டு தகவல் அறிக்கை, வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம், படிவம் 26 ஏ.எஸ்., உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும். நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் சான்றிதழ் ஆன்லைனில் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
