சிறு, குறு நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த கொடிசியா வேண்டுகோள்
சிறு, குறு நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த கொடிசியா வேண்டுகோள்
ADDED : செப் 08, 2025 01:00 AM

கோவை:உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் 'உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை' (பி.எல்.ஐ.,) திட்டத்தை, இன்ஜினியரிங் உற்பத்தி சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் பயனடையும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என, கொடிசியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த 2020ல், பி.எல்.ஐ., திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் வாயிலாக இறக்குமதியை குறைத்து, வேலைவாய்ப்பை அதிகரித்து, இந்தியாவை வலிமையான உற்பத்தி மையமாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
சர்வதேச நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் அதேசமயம், உலகளவில் இந்திய நிறுவனங்களின் போட்டித்தன்மையை வலுப்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.,
அடிப்படை ஆண்டின் விற்பனை மதிப்பை விட, கூடுதலான விற்பனை மதிப்புக்கு 4 முதல் 6 சதவீதம் வரை ஊக்கத்தொகை பெறலாம். 2024- - 25ம் நிதியாண்டில், இதற்காக மத்திய அரசு 6,200 கோடி ரூபாய் ஒதுக்கியது. இது, முந்தைய நிதியாண்டின் ஒதுக்கீட்டை விட 33 சதவீதம் அதிகமாகும்.
துவக்கத்தில், மொபைல் போன் மற்றும் அது சார்ந்த உபகரணங்கள், எலெக்ட்ரிகல் பொருட்கள், மருத்துவ உபகரண உற்பத்தி ஆகிய துறைகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தன.
தற்போது, மருந்து உற்பத்தி, ஆட்டோமொபைல், சிறப்பு உருக்கு, தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங், எலெக்ட்ரானிக் தொழில்நுட்ப உபகரணங்கள், உணவு, டெக்ஸ்டைல்ஸ், சோலார் பிவி மாடுயூல்ஸ், டிரோன் உட்பட 14 பிரிவுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது இத்திட்டத்தை, இன்ஜினியரிங் உற்பத்தி சார்ந்த குறு, சிறு நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:
டெக்ஸ்டைலில் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றன. ஆட்டோமொபைல் துறையில் மிகக் குறிப்பிட்ட அளவு பயன் கிடைக்கிறது.
ஆனால், கோவையில் பம்ப், மோட்டார் போன்ற 'இன்ஜி., துறை சார்ந்த எம்.எஸ்.எம்.இ., உற்பத்தி நிறுவனங்கள் தான் அதிகம் உள்ளன.
இத்துறையில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்றுமதியில் ஈடுபட்டு வந்தாலும், சொற்ப எண்ணிக்கையிலான நிறுவனங்கள்தான் இத்திட்டத்தில் பயன்பெறுகின்ற ன.
சிறு, குறு நிறுவனங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டால், உற்பத்தித் திறனை மேம்படுத்த முடியும். கூடுதல் உற்பத்தி அலகுகளை நிறுவலாம். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். நிறுவனங்கள் பயன் பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.