மின்வாகன துறையில் முதலீடு கொள்கை மாற்றங்களால் சரிவு
மின்வாகன துறையில் முதலீடு கொள்கை மாற்றங்களால் சரிவு
ADDED : டிச 27, 2024 01:23 AM

புதுடில்லி:இந்தியாவில் மின்சார வாகன துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடு, கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு 37 சதவீதம் குறைந்துள்ளது. இத்துறை சார்ந்த அரசின் கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மற்றும் விற்பனை வளர்ச்சி குறைந்ததே, இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த 2022ல், மின்சார வாகன துறையில் 7,900 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் 5,000 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த அக்டோபரில் 'பேம் 2' திட்டத்துக்கு பதிலாக, 'பி.எம்., இ - டிரைவ்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மின்சார வாகனங்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை குறைக்கப்பட்டது. மேலும், மின்சார நான்கு சக்கர வாகனங்களுக்கு, ஹைபிரிட் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகையும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம், மின்சார வாகனங்களின் விற்பனை, எண்ணிக்கை அடிப்படையில் உயர்ந்திருந்தாலும்; வளர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் சரிந்துள்ளது. கடந்தாண்டு 50 சதவீதமாக இருந்த இப்பிரிவின் விற்பனை வளர்ச்சி, நடப்பாண்டில் 24.50 சதவீதமாக குறைந்துள்ளது.

