கூகுள் சேவை கட்டண விவகாரம் 'மேட்ரிமொனி' செயலிகள் நீக்கம்
கூகுள் சேவை கட்டண விவகாரம் 'மேட்ரிமொனி' செயலிகள் நீக்கம்
ADDED : மார் 01, 2024 09:59 PM

புதுடில்லி:சேவை கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து, தற்போது, 'பாரத் மேட்ரிமொனி' உள்ளிட்ட, இந்தியாவின் 10 நிறுவனங்களின் செயலிகளை கூகுள் நீக்கியுள்ளது.
இது, 'இந்திய இணையத்தின் இருண்ட நாள்' என நீக்கப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
'பிளே ஸ்டோர்' மற்றும் அதன் இயங்குதளமான ஆண்ட்ராய்டில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்கள் செயலிகளை இயக்குவதற்கான, சேவை கட்டணமாக 15 முதல் 50 சதவீதம் வரை வழங்கவேண்டும் என, கூகுள் தெரிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சந்தை போட்டி ஆணையத்திடம் புகார் தெரிவித்தன. இதன் பின், கூகுள் நிறுவனம், 11 முதல் 26 சதவீதம் வரை சேவைக் கட்டணம் வசூலிக்க துவங்கியது.
இது சம்பந்தமாக, இந்திய சந்தை போட்டி ஆணையம், கூகுளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியது. இருப்பினும், கூகுள் நிறுவனம், சேவை கட்டணம் தராவிட்டால் சேவை நிறுத்தப்படும் என தெரிவித்தது.
இது தொடர்பாக, டெவலப்பர்கள் நீதிமன்றத்தை அணுகியும், அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், தற்போது நீதிமன்றம் வழங்கிய அவகாச காலம் முடிவடைந்ததை அடுத்து, டெவலப்பர்கள் மீதான நடவடிக்கையை கூகுள் மேற்கொண்டுள்ளது.
'மேட்ரிமொனி.காம், டேட்டிங் ஆப்ஸ், பாரத் மேட்ரிமொனி, கிறிஸ்டியன் மேட்ரிமொனி, முஸ்லீம் மேட்ரிமொனி, ஜோடி' போன்ற 10 செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் பல நிறுவனங்களின் செயலிகளை நீக்கவும் கூகுள் முடிவு செய்து உள்ளது.

