முதலீடு பயணத்தில் தவிர்க்க வேண்டிய ஐந்து நிதி பொறிகள்
முதலீடு பயணத்தில் தவிர்க்க வேண்டிய ஐந்து நிதி பொறிகள்
ADDED : செப் 07, 2025 06:55 PM

சம்பாதிப்பதைவிட அதை சரியாக சேமித்து, முதலீடு செய்வது மிகவும் சவாலானது என்பது புகழ் பெற்ற முதலீட்டு வழிகாட்டி வாரென் பப்பே தொடர்ந்து வலியுறுத்தும் கருத்தாக இருக்கிறது. நிதானமான அணுகுமுறையோடு, சரியான முதலீட்டு முடிவுகள் மூலமே செல்வ வளத்தை உருவாக்க முடியும்.
பெரும்பாலானோர் முதலீடு பயணத்தில் தோல்வியை எதிர்கொள்வதற்கான காரணங்களாக ஐந்து முக்கிய நிதி பொறிகள் அமைவதாகவும் அவர் கருதுகிறார். அந்த வகையில் முதலீடு பயணத்தில் தவிர்க்க வேண்டிய பணம் சார்ந்த தவறுகளை பார்க்கலாம்.
மிகை கடன்:
ஒருவரால் சமாளிக்க கூடியதை விட அதிகமாக கடன் வாங்க கூடாது. கிரெடிட் கார்டு மூலம் தேவையில்லாத செலவுகள், செலவு மிக்க மாதத்தவணைகள், வாழ்வியல் தேவைக்கான கடன் போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். சிறியதாக துவங்கி, பெருமளவு வளர்ந்து பாதிப்பக் ஏற்படுத்துவது கடனின் இயல்பு.
வீண் செலவுகள்:
தேவையில்லாத செலவுகளை தவிர்க்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்ததே. எனினும் நடைமுறையில் பலரும் இதை பின்பற்றுவதில்லை. வருமானம் அதிகரிக்கும் போது ஆடம்பர கார், வாராந்திர பொழுதுபோக்கு என செலவுகளை அதிகரிப்பது சரியல்ல. தேவையில்லாத செலவுகள் பாதிப்பை உண்டாக்கும்.
தவறான முதலீடு:
சேமிப்பை முதலீடு செய்ய வேண்டும் என்றாலும், அவசரத்தில் அல்லது மிகை எதிர்பார்ப்பில் தவறான முதலீடு முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். குறுகிய கால லாப ஈர்ப்புக்கு மயங்கி விடக்கூடாது. முதலீடு விஷயத்தில் பொறுமை மிகவும் அவசியம். புரியாத வர்த்தகத்தில் முதலீடு செய்யக்கூடாது.
அவசர கால நிதி:
பொருளாதார நெருக்கடிகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இது போன்ற சூழல்களில் அவசர கால நிதி கையில் இல்லை என்றால் நிலைமை சிக்கலாகலாம். எனவே அவசர கால நிதியை உருவாக்கி வைத்திருக்க வேண்டும். இந்த தயாரிப்பு இல்லை என்றால் கடன் வலையில் சிக்க வேண்டும்.
உடனடி பலன்:
செல்வ வளத்தை உருவாக்கி கொள்ள குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது. முதலீட்டில் பொறுமை மிகவும் அவசியம். எனவே, உடனடியாக பணத்தை அள்ளித்தருவதாக ஆசை காட்டும் திட்டங்களை நம்பாமல் இருக்க வேண்டும். பங்குகள், ரியல் எஸ்டேட் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.