ADDED : பிப் 20, 2024 12:33 AM

புதுடில்லி:நடப்பு சந்தைப்படுத்துதல் ஆண்டில், கடந்த 15ம் தேதி வரையிலான காலத்தில், சர்க்கரை உற்பத்தி 2.48 சதவீதம் குறைந்து, 2.24 கோடி டன்னாக உள்ளதாக, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது: தரவுகளின் அடிப்படையில், நடப்பு 2023 - 24ம் சந்தைப்படுத்துதல் ஆண்டில், இம்மாதம் 15ம் தேதி வரையிலான சர்க்கரை உற்பத்தி, முந்தைய ஆண்டின் 2.29 கோடி டன்னில் இருந்து 2.48 சதவீதம் குறைந்து, 2.24 கோடி டன்னாக உள்ளது.
மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் சர்க்கரை உற்பத்தி, கடந்த 15ம் தேதி வரை குறைவாகவே இருந்தது.
நாட்டின் இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தியாளரான உத்திர பிரதேசத்தின் சர்க்கரை உற்பத்தி, 67.7 லட்சம் டன்னாக இருந்தது. மேலும், நாட்டின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலமான மஹாராஷ்டிராவில், உற்பத்தி கடந்த 15ம் தேதி வரையில், 79.4 லட்சம் டன்களாக குறைந்துள்ளது. இதே போன்று மூன்றாவது மாநிலமான கர்நாடகாவின் உற்பத்தியும், 46 லட்சம் டன்னில் இருந்து 43.2 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. தமிழகத்தின் உற்பத்தி 4.50 லட்சம் டன்னாக இருந்தது.
கடந்த 15ம் தேதி வரை கிட்டத்தட்ட 505 சர்க்கரை உற்பத்தி ஆலைகள் செயல்பாட்டில் இருந்தன. இது, கடந்த சந்தை ஆண்டில் 502 ஆலைகளாக இருந்தன. மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் கிட்டத்தட்ட, 22 உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளது.

