குண்டும் குழியுமான சாலைகள் பெங்களூருக்கு நிறுவனம் குட்பை
குண்டும் குழியுமான சாலைகள் பெங்களூருக்கு நிறுவனம் குட்பை
ADDED : செப் 17, 2025 11:19 PM

பெங்களூரு:பெங்களூரைச் சேர்ந்த போக்குவரத்து மேலாண்மை நிறுவனமான பிளாக்பக், தனது அலுவலகம் அமைந்துள்ள பகுதியின் மோசமான சாலையால், பெங்களூரில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளது.
பெங்களூரு பெலாந்துாரில் ஓ.ஆர்.ஆர்., எனப்படும் வெளிவட்டச் சாலையில் கடந்த 9 ஆண்டுகளாக செயல்படும் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ராஜேஷ் யபாஜி வெளியிட்ட சமூகவலைதள பதிவு:
நிறுவனம் அமைந்துள்ள பகுதியின் முக்கிய சாலைகள் கூட குண்டும் குழியுமாக, வாகனப் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளன. ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மோசமான சாலையால், ஊழியர்கள் குறுகிய துாரம் பயணம் செய்ய ஒன்றரை மணி நேரம் ஆகிறது.
தினசரி இதுபோன்ற பயணத்தால், அலுவலக ஊழியர்களின் பணித்திறன் பாதிக்கப்படுகிறது. பலமுறை மாநகராட்சி, அரசுக்கு தெரிவித்தும், சாலை மேம்படுத்தப்படவில்லை.
எனவே, பெல்லாந்துாரில் உள்ள பிளாக்பக் நிறுவனத்தை வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.