அம்புஜா சிமென்ட்ஸ் உடன் ஏ.சி.சி., ஓரியன்ட் இணைப்பு
அம்புஜா சிமென்ட்ஸ் உடன் ஏ.சி.சி., ஓரியன்ட் இணைப்பு
ADDED : டிச 24, 2025 01:14 AM

புதுடில்லி: அதானி குழுமத்தை சேர்ந்த 'அம்புஜா சிமென்ட்ஸ்' உடன், அதன் துணை நிறுவனங்களான ஏ.சி.சி., மற்றும் ஓரியன்ட் சிமென்ட் நிறுவனங்கள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிமென்ட் வணிகத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, நாடு முழுதும் வலுவான கட்டமைப்புடன் செயல்படும் நோக்கத்தில் அதானி குழுமம் இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்புஜா சிமென்ட்ஸின் இயக்குநர் குழு இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. குழுமத்துக்குள்ளான இணைப்பு நடவடிக்கை என்பதால், இதற்கு இந்திய போட்டி ஆணையத்தின் ஒப்புதல் தேவைப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பென்னா சிமென்ட் மற்றும் சங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் அம்புஜா சிமென்ட்சுடன் இணைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ஏ.சி.சி., மற்றும் ஓரியன்ட் ஆகியவற்றின் இணைப்புக்குப் பின் அம்புஜா நிறுவனத்தின் மொத்த ஆண்டு உற்பத்தி திறன் வரும் 2027 - 28ம் நிதியாண்டுக்குள் 15.50 கோடி டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் இதன் ஆண்டு உற்பத்தி 10 கோடி டன்னை தாண்டியது.
இணைப்பு திட்டத்தின்படி, ஏ.சி.சி. பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 100 பங்குகளுக்கும், அம்புஜாவின் 328 பங்குகள் வழங்கப்படும் என்றும்; ஓரியன்ட் பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 100 பங்குகளுக்கும், 33 அம்புஜா பங்குகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு குறித்த செய்தி வெளியானதும், பங்குச்சந்தையில் நேற்று அம்புஜா சிமென்ட்ஸின் பங்கு விலை 1.26 சதவீதம் உயர்ந்து 546.75 ரூபாய்க்கு வர்த்தகமானது.

