ADDED : மே 17, 2024 01:33 AM

சென்னை:“இந்தியாவில், பொருளாதார மண்டலத்திற்கான சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது,” என, டி.பி., வேர்ல்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரஞ்சித் ரே தெரிவித்துள்ளார்.
டி.பி., வேர்ல்டு நிறுவனத்தின், இந்தியாவில் மிகப்பெரிய, 'பிரி டிரேட் வேர்ஹவுசிங் சோன்' எனப்படும் தடையற்ற வர்த்தகம் மற்றும் கிடங்கு மண்டலம், சென்னையில் செயல்பட துவங்கியுள்ளது. இது, திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார் துறைமுகம் அருகில் உள்ளது.
டி.பி., வேர்ல்டு நிறுவனத்தின் இந்திய பொருளாதார மண்டலங்களுக்கான தலைமை செயல் அதிகாரி ரஞ்சித் ரே கூறியதாவது:
கடந்த, 40 - 50 ஆண்டு களாக, இந்தியாவில் தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. பொருளாதார மண்டலத்திற்கான சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
எங்கள் நிறுவனத்தின் சென்னை பொருளாதார மண்டலம், 6 லட்சம் சதுர அடியாக உள்ளது. இது, 20 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் பெறும் வாய்ப்புடன் உள்ளது.
இந்தியாவில் டி.பி., வேர்ல்டு மூன்று பொருளாதார மண்டலங்களை கொண்டுள்ளது. சென்னையில், 125 ஏக்கரிலும், மும்பையில், 85 ஏக்கரிலும் அமைந்துள்ளன. கேரளா மாநிலம், கொச்சியில் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

