ADDED : மே 02, 2024 02:16 AM

புதுடில்லி : நடப்பு கோடை காலத்தில், தற்காலிக தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும், இது நடப்பாண்டில் புதிய உச்சத்தை எட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பொருட்கள், சரக்கு போக்குவரத்து, சில்லரை வர்த்தகம், மின்னணு வர்த்தகம், தயாரிப்பு, விருந்தோம்பல் மற்றும் நிதிச் சேவை ஆகிய துறைகளில், தற்காலிக தொழிலாளர்களுக்கான தேவை, நடப்பாண்டு கோடையில் அதிகரித்துள்ளதாக, மேன்பவர், அடேக்கோ மற்றும் சி.ஐ.இ.எல்., ஆகிய ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், நடப்பாண்டில் இவர்களுக்கான தேவை, 20 முதல் 25 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்ப்பதாகவும், அவை தெரிவித்துள்ளன.
மே முதல் ஜூன் வரையிலான காலத்தில், பள்ளி விடுமுறைக் காலம் என்பதால், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் தேவை அதிகரிக்கும். அத்துடன் பிளிப்கார்ட், அமேசான் போன்ற மின்னணு வர்த்தக தளங்கள், இந்த காலகட்டத்தில் தங்கள் சிறப்பு விற்பனையை துவக்குவதால், தேவை மேலும் அதிகரிக்கும்.
இதுகுறித்து, மேன்பவர் குழுமத்தின் மூத்த இயக்குனர் அலோக் குமார் தெரிவித்துள்ளதாவது:கோடை கால தேவை அடிப்படையில் வைத்து பார்க்கும் போது, கடந்த 2019ம் ஆண்டை விடவும், நடப்பாண்டு தேவை சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

