பொது மன்னிப்பு திட்டத்தை நீட்டிக்க சிறு ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை
பொது மன்னிப்பு திட்டத்தை நீட்டிக்க சிறு ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை
ADDED : ஏப் 23, 2024 07:03 AM
புதுடில்லி : ஏற்றுமதி கடமையில் இருந்து தவறிய சிறு ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒருமுறை தீர்வு காணும் பொது மன்னிப்பு திட்டத்தை, செப்டம்பர் வரை தொடர வேண்டும் என, தொழில்துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
இ.பி.சி.ஜி., எனப்படும், இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் முடிக்கப்பட்ட பொருட்களை, ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும்.
இதற்காக விதிக்கப்படும் சுங்க வரி மற்றும் வட்டியை செலுத்துவதற்கான கடைசி தேதி கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதைச் செய்ய தவறியவர்களுக்கு, புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையில், ஒருமுறை தீர்வு காணும் பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ், அவர்களுக்கு விலக்கு அளிக்கும் திட்டத்தை அரசு அறிவித்தது.
இத்திட்டத்தின் பயனை பெற இயலாத அங்கீகாரம் பெற்ற சிறு ஏற்றுமதியாளர்கள், தங்களுக்கு இத்திட்டத்தை, வருகிற செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து அனுமதி வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
இதுகுறித்து லுாதியானாவைச் சேர்ந்த 'ஹேண்ட் டூல்ஸ் அசோசியேஷன்' தலைவர் ரால்ஹான் கூறியதாவது:
கடந்த 2023 நிதிச் சட்டம் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிச் சட்டப் பிரிவின் படி, ஒரு பெரிய நிறுவனம், எம்.எஸ்.எம்.இ., எனப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்தவில்லை என்றால், 45 நாட்களுக்குள், அந்த செலவை அதன் வரிவிதிப்பு வருமானத்தில் இருந்து கழிக்க முடியாது.
இது அதிக வரி விதிப்புக்கு வழிவகுக்கிறது. ஆகையால், நாங்கள் பணம் செலுத்துவதற்கு எங்கள் நிதியை திருப்பி விட்டோம்.
மேலும், எங்களில் பலர் பொதுமன்னிப்பு திட்டத்தின் பலன்களை பெற விண்ணப்பிக்க முடியவில்லை.
செப்டம்பர் வரை இத்திட்டத்தை நீட்டித்தால் விண்ணப்பிக்கவும், இதன் பலனை தொழில்துறையினர் பெறவும் உதவிகரமாக இருக்கும் என்பதால், திட்டத்தை நீட்டிக்க அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், இத்திட்டத்திற்கான பலன்களை பெறுவது தொடர்பான தரவுகளை, வர்த்தக அமைச்சகம் தொகுத்து வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

