இந்தியா வருகிறார் எலான் மஸ்க்: பிரதமர் மோடியை சந்திப்பதில் ஆர்வம்
இந்தியா வருகிறார் எலான் மஸ்க்: பிரதமர் மோடியை சந்திப்பதில் ஆர்வம்
ADDED : ஏப் 11, 2024 09:48 PM

புதுடில்லி: 'டெஸ்லா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், இந்தியாவுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் வரும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா மின்சார கார்களை, இந்தியாவில் அறிமுகப்படுத்த நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார். வாகனங்களுக்கான அதிக இறக்குமதி வரி காரணமாக, டெஸ்லா இந்தியாவில் நுழைவதற்கு தயக்கம் காட்டி வந்தது.
இந்நிலையில், அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய மின்வாகன கொள்கை வாயிலாக, குறைந்த வரியில் நிறுவனங்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய வழிவகுக்கப்பட்டது.
இந்த மாற்றம், இந்திய சந்தையில் டெஸ்லா நுழைவதற்கு சாதகமாக உள்ளதால், டெஸ்லாவின் வருகை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
''இந்திய சந்தையில் மின்சார வாகனங்களை டெஸ்லா அறிமுகப்படுத்துவது, இயற்கையாக நடக்கும்” என எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் இந்தியாவுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்குவதாக, எலான் மஸ்க் தனது 'எக்ஸ்' சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரிலையன்ஸ் உடன் கூட்டு
இந்தியாவில், மின்வாகன தொழிற்சாலை அமைப்பதற்காக, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்வது குறித்து, டெஸ்லா பேச்சு நடத்தி வருவதாகவும், இந்த கூட்டு முயற்சியில், ரிலையன்ஸ் நிறுவனம், தயாரிப்பு வசதிகளை மட்டும் ஏற்படுத்தித் தர உள்ளதாகவும், வாகன தொழிலில் அது ஈடுபடாது எனவும் கூறப்படுகிறது.

