/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சி.இ.டி., தேர்வில் ஆள் மாறாட்டம் சிக்கிய பெண் தப்பியோட்டம்
/
சி.இ.டி., தேர்வில் ஆள் மாறாட்டம் சிக்கிய பெண் தப்பியோட்டம்
சி.இ.டி., தேர்வில் ஆள் மாறாட்டம் சிக்கிய பெண் தப்பியோட்டம்
சி.இ.டி., தேர்வில் ஆள் மாறாட்டம் சிக்கிய பெண் தப்பியோட்டம்
ADDED : ஏப் 18, 2025 07:14 AM
பெங்களூரு: வேறு ஒரு மாணவியின் பெயரில், சி.இ.டி., தேர்வு எழுத வந்த இளம் பெண், அதிகாரிகளிடம் சிக்கி தப்பியோடினார்.
பெங்களூரு, மல்லேஸ்வரத்தின் ஏழாவது குறுக்கு சாலையில் உள்ள சில்வர் வேலி பப்ளிக் பி.யு., கல்லுாரியின் தேர்வு மையத்தில், நேற்று காலை கணித தேர்வு நடந்தது. தேர்வு துவங்க அரை மணி நேரத்துக்கு முன், தேர்வு எழுத வந்த இளம் பெண், நேராக கழிப்பறைக்கு சென்றார். அரை மணி நேரமாகியும் வெளியே வரவில்லை.
தேர்வு துவங்கும் நேரத்துக்கு சரியாக, வெளியே வந்தார். அங்கிருந்த மேற்பார்வையாளரிடம், 'கியூஆர் கோட்' உள்ள நுழைவு சீட்டை காட்டி, உள்ளே செல்ல முயற்சித்தார். அப்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் செயலி மூலம், அவரை படம் பிடித்த போது அவர் உண்மையானவர் அல்ல போலியானவர் என்பது தெரிந்தது.
இந்த விஷயத்தை மேற்பார்வையாளர், கல்லுாரி முதல்வரிடம் தெரிவித்தார். கல்லுாரி முதல்வர் அங்கு வருவதற்குள், அந்த பெண் அங்கிருந்து ஓடிவிட்டார்.
உண்மையில் தபு நாஜ் என்பவர், தேர்வுக்கு ஆஜராகியிருக்க வேண்டும். அவரது நுழைவு சீட்டில் அப்பெண் தன் போட்டோவை ஒட்டியுள்ளார். தேர்வு தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, வீடியோ காட்சிகளுடன், அறிக்கை அளிக்கும்படி கல்லுாரி முதல்வருக்கு, கர்நாடக தேர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, கர்நாடக தேர்வு ஆணைய செயல் நிர்வாக இயக்குனர் பிரசன்னா கூறியதாவது:
சி.இ.டி., தேர்வு எழுத வந்த பெண்ணை பற்றி, ஆவணங்களுடன் அறிக்கை அளிக்கும்படி, கல்லுாரி முதல்வரிடம் கேட்டுள்ளோம். அறிக்கை கிடைத்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
போலியான நபர்களை கண்டுபிடிக்கும் நோக்கில், கர்நாடக தேர்வு ஆணையம் முகத்தை அடையாளம் காணும் புதிய தொழில் நுட்பத்தை செயல்படுத்தியுள்ளது. தேர்வு எழுத வருவோர் இந்த தொழில் நுட்பம் உதவியுடன் சோதனை நடத்துகிறோம். இன்று (நேற்று) தேர்வு எழுத வேறொரு பெயரில் வந்த இளம் பெண்ணை, இதே தொழில் நுட்பம் அடையாளம் காட்டியது.
இவ்வாறு அவர் கூறினார்.

