/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர் திம்மாபூர் ராஜினாமா செய்வாரா?
/
அமைச்சர் திம்மாபூர் ராஜினாமா செய்வாரா?
ADDED : ஜன 28, 2026 06:37 AM

கலால் துறை அமைச்சர் திம்மாபூர் மகன் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால், காங்கிரஸ் அரசு தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளது. எந்த நேரத்திலும் கலால் துறை அமைச்சர் திம்மாபூர் ராஜினாமா செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக மதுபான கடைகள் திறக்க வேண்டும் என்றால், கலால் துறையிடம் முறைப்படி அனுமதி பெறுவது அவசியம். மதுபானம் விற்பனைக்கு லைசென்ஸ் கேட்ட நபரிடம், அதிகாரிகளே லஞ்சம் கேட்டதாக தகவல் வெளியானது. அதிகாரிகள் மற்றும் மதுபான விற்பனைக்கு லைசென்ஸ் கேட்ட நபர்கள் இடையே நடந்த உரையாடல் ஆடியோ, சமீபத்தில் வெளியானது. அதில், கலால் துறை அமைச்சர் திம்மாபூர் மகனின் பெயரும் கூறப்பட்டதால், அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது.
கலால் துறையில் முறைகேடு நடப்பதாக, சில மாதங்களாகவே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. தற்போது, முறைகேடுக்கு சாட்சியாக ஆடியோ வெளியாகியுள்ளது. எனவே, அமைச்சர் திம்மாபூர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், அவரை அமைச்சரவையில் இருந்து முதல்வர் சித்தராமையா நீக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கடந்த, 23ம் தேதி, சட்டசபையில் இது தொடர்பாக விவாதிக்க, எதிர்க்கட்சி தலைவர் அசோக் அனுமதி கேட்டார். கலால் துறையில் 2,500 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அதற்கு பொறுப்பேற்று, கலால்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என, வலியுறுத்தினார். இதை, பா.ஜ., - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் ஆமோதித்தனர்.
எதிர்க்கட்சிகளின் நெருக்கடியால், திம்மாபூர் எந்த நேரத்திலும் அமைச்சர் பத வியை ராஜினாமா செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது அல்லது அவரை ராஜினாமா செய்யும்படி, முதல்வரே உத்தரவிட்டாலும் ஆச்சரியமில்லை. ஒருவேளை திம்மாபூர் ராஜினாமா செய்தால், காங்கிரஸ் அரசில் பதவியை இழந்த மூன்றாவது அமைச்சராக இருப்பார்.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த சில மாதங்களில், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் தவறாக பயன்படுத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணை நடத்திய போது, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் பணத்தை, லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய நேரிட்டது.
அதேபோல, கூட்டுறவு துறை அமைச்சராக இருந்தவர் ராஜண்ணா. இவர் கட்சியின் மேலிட தலைவர்கள் பற்றி, சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார். மேலிடத்தின் உத்தரவுக்கு கட்டுப்படாமல், முதல்வர் மாற்றம் மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து, அவ்வப்போது பகிரங்கமாக பேசி, கட்சியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மேலிடம், அவரிடம் ராஜினாமா பெற்றது.
இப்போது காங்கிரசில் மூன்றாவதாக, கலால் துறையில் நடந்த லஞ்ச முறைகேட்டால், திம்மாபூரும் பதவியை இழப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -

