ADDED : ஜன 07, 2026 05:15 AM
மறந்துட்டாங்களா?
பு ல்லு மார்க்கெட் விவகாரம், சிலருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக அரசு வட்டாரத்தில் பேசுறாங்க. வாழ்வாதாரத்துக்கு மாற்று வழி செய்யாமல், துக்ளக் தர்பார் போல இடிப்பு வேலையை நடத்திட்டாங்க. அதனை இடித்ததுடன் அடுத்த திட்டத்துக்கு கவனம் செலுத்தல. புல்லு மார்க்கெட் கடைகளை இடித்ததையும் மறந்துட்டாங்களோ.
இடித்து தள்ளின கட்டட கற்கள், இரும்பு கம்பிகள், இரும்பு ஷட்டர்கள், கதவுகள், ஜன்னல்கள், மரச்சாமான்கள், மண் லோடுகள் எங்கே, யாருக்கு விற்கப்பட்டது. இதற்கு எப்போது டெண்டர் விடப்பட்டது. காலி மைதானமாகியுள்ள இந்த இடத்தில் கட்டடம் கட்ட 50 கோடி ரூபாய் கடன் வாங்குவதா சொன்னாங்களே; கிடைத்ததா.
இதற்கு வட்டி விகிதம் எவ்வளவு. இப்படி கேள்வி மேல் கேள்விகள் உருவாகி பலரின் தலையை சுற்ற வைத்திருக்கு. இங்கு கட்டடப் பணிகள் தொடங்குவாங்களா அல்லது அந்த திட்டமே கலைந்த கனவாகி மறந்திடுவாங்களா. இதெல்லாமே ஊமை கனவோ.
எதுக்கு புது ரூட்?
கொ லை, கொள்ளை வழக்குகளில் சிக்கி, ரவுடி பட்டியலில் இருக்கிற 'கேங் லீடர்கள்' சிலர் முனிசி., தேர்தலில் போட்டியிட தயாராகுறாங்க. சமுதாயத்தில திருந்தி வாழணு முன்னு அவங்க எல்லாம் புது ரூட் கண்டுபிடித்து இருக்காங்க. ரவுடிகளுக்கு புனர் வாழ்வு தர, தேர்தல் தான் மாறுதலாம்.
இப்படி தான் முனிசி., வளாகத்தில் ரவுடி பட்டியலில் இருந்தவர் கவுன்சிலரா இருந்தாரு. எதிர் கோஷ்டி கும்பல் வெட்டிசாய்த்து கொலை களமா மாற்றின பழைய காட்சிகளும் முனிசி., வரலாற்றில் மறையல. சமூக சேவை பெயரில் ரணகளமா மாறாமல் இருந்தாலே, எல்லாம் சரியாக நடக்கும்.
தயாராகும் கட்சிகள்
உ ள்ளாட்சி தேர்தல் வரப் போகுது. இதுல போட்டியிட, சுயேச்சைகள் தான், அதிக அளவு ரோடுகளில் நடமாடுறாங்க. வண்ண வண்ண கொடிகளின் கட்சி லோக்கல் தலைவர்களே எந்த வார்டில் போட்டியிடலாமென ஆரூடம் பார்த்து கும்பிடு போடுறாங்க.
யாரெல்லாம் ஜெயிக்கணும்; யாரை போட்டியிட விடாம தடுக்கணும்; அதற்கு ஏற்ற இட ஒதுக்கீடு அறிவிக்க அசெம்பிளிக்காரர் திட்டமிட்டு செயல்பட்டு வர்ராரு. இதில அவங்க கட்சி சீனியர்களையும் ஒதுக்கி வைக்க உள்வேலை நடக்குது.
பூ கட்சிக்காரங்க இம்முறை முனிசி., அதிகாரத்தை பிடிக்க தயார் நிலையில் இருக்காங்க. மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றவங்க, இம்முறை 15க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற ஆயத்த பணிகளில் ஈடுபடுறாங்க. வேட்பாளர் பட்டியலும் தயார் செய்திட்டாங்களாம். சுயேச்சைகளை தம் பக்கம் இழுக்கும், 'மேக்னடிக்' வேலையையும் செய்து வராங்க.
மைனிங் பகுதியில் துாங்கிக் கொண்டிருப்பவங்களை தட்டி எழுப்பும் வேலை நடக்குது. ஜெயித்தவங்க அந்த கட்சியில் நீடிக்காம டிமிக்கி கொடுத்து வேறு கட்சிக்கு பல்டி அடிப்பதே வழக்கம். ஜெயிக்கிற வரைக்கும் தான், அந்த கட்சியின் முகவரியை பயன்படுத்துறாங்க.
முனிசி., தேர்தலில் சூரிய கட்சி, இலை கட்சி போட்டியிடுவதற்கான அறிகுறியே 10 ஆண்டுகளாகவே தென்படல.
பட்டா இல்லாத வீடுகள்
செ ங்கோட்டை தேர்தல் நேரத்துல, மாஜி பூக்கார முனி., முயற்சியில், மைனிங் பகுதியில் உள்ள 1,000 தொழிலாளர் வீடுகளுக்கு மட்டுமே அவசர அவசரமாக சர்ட்டிபிகேட் வழங்கினாங்க. மற்றவர்களுக்கு கொடுக்காமல் சாக்கு போக்கு சொல்லிட்டாங்க.
ஒரே இடத்தில, 25,000க்கும் அதிகமான வீடுகளில், 'மாஜி' தொழிலாளர் குடும்பங்கள், 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழுறாங்க. இவங்களுக்கு சொந்தமாக்க அரசு உத்தரவாதம் எப்போ கிடைக்கப் போகுதோ.
ஓட்டு போட முகவரியோடு அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மின் கட்டண ரசீது மட்டுமே அடையாளமா இருக்குது. மக்கள் தலைவர்களின் பார்வை, தேர்தலின் போது, ஓட்டுக்காக மட்டுமே மைனிங் பகுதியில் வாழுறவங்கள பற்றி கவனம் காட்டுதே தவிர, குடியிருப்பவங்களுக்கு வீட்டுரிமை பட்டா எப்போ கிடைக்க போகுதோ.

