UPDATED : நவ 03, 2026 12:11 AM
ADDED : நவ 03, 2026 12:07 AM
ஹூப்பள்ளி: குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் போது, பெண்ணின் குடலில் காயம் ஏற்பட்டதில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஹூப்பள்ளி மாவட்டம் குந்த்கோல் தாலுகாவின், ரோடிகவாடா கிராமத்தை சேர்ந்தவர் பசவ்வா, 28.
இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இதனால் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அவரது குடும்பத்தினர், அக்டோபர் 28ல் நவல்குந்த் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பசவ்வாவுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யும் போது, வெட்ட வேண்டிய நரம்புக்கு பதிலாக, சிறுகுடலை வெட்டியதில் காயம் ஏற்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்த பின்னரே, குடலில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. உடனடியாக ஆம்புலன்சில் ஹூப்பள்ளியின் கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அவரை அனுப்பும் போது, நவல்குந்த் டாக்டர்கள், ‘பெண்ணின் உடல் எடை அதிகம் இருந்ததால், அறுவை சிகிச்சையின் போது, குடலில் காயம் ஏற்பட்டது, உடனடியாக தெரியவில்லை. அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை’ என, வீடியோ கால் வழியாக, கிம்ஸ் டாக்டர்களுக்கு தெரிவித்தனர்.
பசவ்வாவுக்கு கிம்ஸ் மருத்துவமனையில், தொடர்ந்து சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று காலையில் அவர் உயிரிழந்தார்.
இதற்கு நவல்குந்த் மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றஞ்சாட்டினர்.
