'எளிமையான காவிரி' திட்டம் குடிநீர் வாரியம் நீட்டிப்பு
'எளிமையான காவிரி' திட்டம் குடிநீர் வாரியம் நீட்டிப்பு
ADDED : ஏப் 30, 2026 12:18 AM

பெங்களூரு: ''பெங்களூரின் அனைத்து மக்களுக்கும் துாய்மையான காவிரி நீரை வினியோகிப்பதன் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தை காப்பாற்றும் நோக்கில், 'எளிமையான காவிரி' திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் தெரிவித்தார்.
பெங்களூரு குடிநீர் வாரிய மத்திய அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ராம் பிரசாத் மனோகர், நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
புதிதாக காவிரி குடிநீர் இணைப்பு பெறும் போது, செலுத்த வேண்டிய கட்டணத்தை ஒரே முறையில் செலுத்துவது, ஏழைகளுக்கு கஷ்டமாக இருக்கும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், அபார்ட்மென்ட்களில் வசிக்கும் மக்களின் வசதிக்காக, 'எளிமையான காவிரி' திட்டம் செயல்படுத்தப்பட்டது. தவணை முறையில் செலுத்த வாய்ப்பளிக்கப்படுகிறது.
அதாவது, 600 சதுர அடி வீட்டுமனை வைத்துள்ளவர்கள், வெறும் 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, குடிநீர் இணைப்பு பெறலாம். பாக்கியுள்ள கட்டணத்தை, தவணை முறையில் செலுத்தலாம். அபார்ட்மென்ட்களில் வசிப்போர், ஆரம்பத்தில் 20 சதவீதம் செலுத்தி, குடிநீர் இணைப்பு பெறலாம். பாக்கி தொகையை செலுத்த, 12 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
வெறும் வீடுகள் மட்டுமின்றி, வர்த்தக கட்டடங்களுக்கும், கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் சலுகை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமான குடிநீரை வினியோகித்து, மக்களின் ஆரோக்கியத்தை காப்பாற்றும்படி, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி எளிமையான காவிரி இணைப்பு திட்டத்தை நீட்டித்துள்ளோம்.
சிவகுமாரின் தலைமையில், பெங்களூரு குடிநீர் வாரியம் மக்களுக்காக பணியாற்றுகிறது. சமூக நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நடமாடும் காவிரி, எளிமையான காவிரி இணைப்பு உட்பட பல திட்டங்கள் மக்களுக்கு உதவுகின்றன. தவணை முறையில் கட்டணம் செலுத்தும் திட்டத்தை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
