காங்.,கில் இணைய சிவகுமார் அழைப்பு பா.ஜ., பிரதாப் சிம்ஹா 'திடுக்' தகவல்
காங்.,கில் இணைய சிவகுமார் அழைப்பு பா.ஜ., பிரதாப் சிம்ஹா 'திடுக்' தகவல்
ADDED : ஏப் 28, 2026 04:15 AM

கார்வார்: ''காங்கிரசில் இணையும்படி, துணை முதல்வர் சிவகுமாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது,'' என்று, மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா தெரிவித்தார்.
கார்வாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மைசூரு எம்.பி.,யாக இரண்டு முறை பணியாற்றி, மக்களுக்கு நிறைய உதவிகள் செய்து உள்ளேன். 2024 லோக்சபா தேர்தலில் கட்சி மேலிடம் எனக்கு சீட் மறுத்தது. அது மேலிட முடிவு என்பதால் அமைதியாகி விட்டேன்.
அந்த நேரத்தில், குனிகல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத்தின் மொபைல் போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் துணை முதல்வர் சிவகுமார் பேசினார். என்னிடம் 12 நிமிடங்கள் பேசினார். காங்கிரசில் இணையுங்கள்; தேர்தலில் போட்டியிட உங்களுக்கு சீட் வாங்கி தருகிறேன் என்றார்.
எனது சித்தாந்தத்தை விட்டு வர முடியாது என்று கூறினேன். 'முதலில் காங்கிரசுக்கு வாருங்கள்; எங்கள் கட்சி சித்தாந்தம் பிடித்தால் இங்கு இருங்கள்; இல்லாவிட்டால் ஐந்து ஆண்டுகள் கழித்து திரும்பி செல்லலாம்; இப்போதைக்கு உங்களுக்கு அரசியல் எதிர்காலம் தான் முக்கியம்' என்றார்.
லட்சக்கணக்கான இளைஞர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையால், நான் பா.ஜ.,வில் இருந்து விலகவில்லை.
ஒருவேளை சிவகுமார் பேச்சை கேட்டு, நான் காங்கிரஸ் சென்று இருந்தால் இப்போது எம்.பி.யாக இருந்து இருப்பேன்.
அதிகாரத்திற்காக நிறைய பேர் கட்சி மாறுகின்றனர். நான் அத்தகைய நபர் இல்லை. வரும் 2028 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். விதான் சவுதாவுக்குள் நான் செல்வது 100 சதவீதம் உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
